IND vs SA Day 2: ‘பேட்டிங்னா இப்டி இருக்கனும்’-சதம் விளாசி மிரட்டிய டீன் எல்கர்! 2வது நாள் முடிவில் 11 ரன்கள் முன்னிலை
தென்னாப்பிரிக்காவின் சென்சூரியனில் நடந்துவரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான தனது முதல் இன்னிங்ஸில் இரண்டாவது நாளில் தென் ஆப்பிரிக்கா 66 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் டீன் எல்கர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 14வது சதத்தை விளாசினார்.
ஓபனிங் பேட்ஸ்மேன்களாக எய்டன் மார்க்ரம், டீன் எல்கர் ஆகியோர் களம் புகுந்தனர். எய்டன் மார்க்ரம் பெரிதாக சோபிக்கவில்லை. வெறும் 5 ரன்கள் எடுத்திருந்தபோது சிராஜ் பந்துவீச்சில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த டோனி டி ஜோர்ஸியும் 28 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் பீட்டர்சன் 2 ரன்னில் ஆட்டமிழந்து தென்னாப்பிரிக்க ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
ஆனால், டீன் எல்கர் மட்டும் பொறுமையை இழக்காமல் நிதானமாக விளையாடி அரை சதம் விளாசினார். பின்னர், அரை சதத்தை சதமாக மாற்றினார்.
மறுபக்கம் அவருக்கு டேவிட் பெடிங்காம் தோள் கொடுத்தார். அவரும் அரை சதம் பதிவு செய்தார். ஆனால், அவரால் நீண்ட நேராம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. 56 ரன்கள் எடுத்திருந்தபோது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் டேவிட்.
விக்கெட் கீப்பர் கைல் வந்தவேகத்தில் 4 ரன்களில் ஆட்டமிழந்து சென்றார்.
மார்கோ ஜான்சன் 3 ரன்களுடனும், டீன் எல்கர் 211 பந்துகளில் 23 போர்ஸுடன் 140 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் 66 ஓவர்கள் முடிந்த நிலையில், ஆட்டம் தடைப்பட்டது.
இவ்வாறாக 2வது நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் குவித்துள்ளது. 11 ரன்கள் இந்தியாவை விட முன்னிலையில் உள்ளது தென்னாப்பிரிக்கா. நாளை மதியம் இப்போட்டியின் 3வது நாள் ஆட்டம் தொடங்கும்.
South Africa 256/5 on Day 2 Stumps.
Proteas with the lead of 11 runs – an ordinary day for team India, South Africa cashed in on the opportunities. A really important session 1 tomorrow for India. pic.twitter.com/JnFC4PVZZf
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 27, 2023
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஜெய்ஸ்வால்-ரோகித் சர்மா ஜோடி ஓபனிங் இறங்கிய நிலையில், ரோகித் சர்மா 5 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 17 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்து களம் இறங்கிய சுப்மன் கில் 2 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்த நிலையில் சிறிது நேரம் களத்தில் நின்ற விராட் கோலியை 38 ரன்களில் ரபாடா வெளியேற்றினார். ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களிலும், அஸ்வின் 8 ரன்களிலும், ஷகுல் தாகுர் 24 ரன்களிலும், பும்ரா ஒரு ரன்னிலும் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர்.
இன்று 2வது நாள் ஆட்டம் காலை தொடங்கியது. கே.எல்.ராகுல் நிதானமாக செயல்பட்டு சதம் விளாசினார். 101 ரன்கள் எடுத்திருந்தபோது பர்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதற்கு முன்பே சிராஜும் நடையைக் கட்டியிருந்தார்.
ரபடா 5 விக்கெட்டுகளையும், பர்கர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். மார்கோ ஜான்சன், ஜெரால்டு ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இவ்வாறாக இந்திய அணி 67.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் எடுத்தது.