IND vs SA : டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன்சியை நிரூபித்த ரோகித் சர்மா.. பிசிசிஐ-க்கு புதிய தலைவலி!

நியூலாண்ட்ஸ்: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை சமன் செய்து வரலாறு படைத்ததன் மூலமாக கேப்டன் ரோகித் சர்மா தனது கேப்டன்சி திறமையை நிரூபித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்து அசத்தியுள்ளது. முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தாலும், இரண்டாவது போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.
இந்த டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவின் கேப்டன்சி எப்படி இருக்கும் என்ற கவனம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. ஏனென்றால் 36 வயதாகும் ரோகித் சர்மா, ஏற்கனவே சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் தோல்வியை சந்தித்தார். அதுமட்டுமல்லாமல் 2022ல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு பின் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் பக்கமே திரும்பவில்லை.
இதனால் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியாவே கேப்டனாக செயல்பட வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது. இதனால் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா பேட்டிங் மற்றும் கேப்டன்சியை சொதப்பினால், அவரின் கேப்டன் பதவி பறிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சில பேச்சுகள் எழுந்தன.
ஆனால் முதல் இன்னிங்ஸில் 39 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 17* என்று இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதோடு, முதல் போட்டியில் செய்த தவறுகளில் இருந்து உடனடியாக பாடம் கற்று குதிரை போல் கேப்டன்சியில் எழுந்துள்ளார் ரோகித் சர்மா. இதனால் அடுத்ததாக சொந்த மண்ணில் நடக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை மட்டும் வென்றாலே, 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரை இந்திய அணியின் கேப்டனாக செயல்பட வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.