IND vs SA : ஒன் மேன் ஆர்மி.. தென்னாப்பிரிக்காவில் தெறிக்கவிட்ட பூம்.. பும்ரா.. 3வது முறையாக சாதனை!
நியூலாண்ட்ஸ்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணிக்காக அறிமுகமானவர் பும்ரா. டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு தான் பும்ரா சரிபட்டு வருவார் என்று பேசி வந்த பும்ராவை, விராட் கோலி தைரியமாக தென்னாப்பிரிக்கா மண்ணில் அறிமுகம் செய்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஆனால் விராட் கோலியின் நம்பிக்கையை முதல் தொடரிலேயே காப்பாற்றினார் பும்ரா. அதன்பின் இந்திய அணி எப்போது வெளிநாடுகளுக்கு பயணம் செய்தாலும் முதன்மை பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தான். இந்த நிலையில் 10 மாத ஓய்வுக்கு பின் நேரடியாக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு பும்ரா தேர்வு செய்யப்பட்ட போது மீண்டும் காயமடைய வாய்ப்புள்ளதோ என்ற சந்தேகங்கள் எழுந்தன. அதேபோல் ஒயிட் பால் கிரிக்கெட்டை போல் அல்லாமல் நீண்ட ஸ்பெல்லை பும்ரா வீச வேண்டிய நிலை வரும். அதற்கு அவர் தயாராக இருக்கிறாரா என்ற கேள்விகள் வீசப்பட்டன.
அதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் முதல் டெஸ்ட் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்பின் 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதல் நாளில் சிராஜ் ஒரு பக்கம் வாழ்நாளின் சிறந்த ஸ்பெல்லை வீசி 6 விக்கெட்டுகளை கொத்தாக தூக்கினார். பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சிறப்பாக பந்துவீசியும் பும்ராவுக்கு விக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்று பார்க்கப்பட்டது.