IND vs SA Third ODI Result: பவுலிங்கில் கலக்கிய அர்ஷ்தீப்! 78 ரன்களில் வெற்றி – இளம் படையுடன் சாதித்த கேஎல் ராகுல்
இந்தியா – தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி பார்ல் நகரிலுள்ள போலாந்து பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பரிக்கா பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் விக்கெட் இழப்புக்கு ரன்கள் எடுத்தது. இந்திய பேட்ஸ்மேன்களில் சஞ்சு சாம்சன் சிறப்பாக பேட் செய்து அதிகபட்சமாக 108 ரன்கள் அடித்தார். இவருக்கு அடுத்தபடியாக திலக் வர்மா 52 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரும் முறையே தங்களது முதல் சதம், அரைசதத்தை அடித்தனர். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ரிங்கு சிங் 38 ரன்கள் அடித்தார்.
தென் ஆப்பரிக்கா பவுலர்களில் பியூரன் ஹென்ட்ரிக்ஸ் 3, நாந்த்ரே பர்கர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து சேஸிங்கில் களமிறங்கிய தென் ஆப்பரிக்கா அணி 45.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.
அத்துடன் தென் ஆப்பரிக்காவில் ஒரு நாள் தொடரை வென்ற கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார் கேஎல் ராகுல். தென் ஆப்பரிக்கா மண்ணில் இரண்டாவது முறையாக ஒரு நாள் தொடரை வென்ற ஆசிய அணி என்ற பெருமையை இந்திய பெற்றுள்ளது.
கடைசியாக 2018 சுற்றுப்பயணத்தின்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை வென்றது. இதைத்தொடர்ந்து தற்போது கேஎல் ராகுல் தலைமையிலான இளம்படை 2-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை வெற்றி பெற்றுள்ளது.
தென் ஆப்பரிக்கா அணியின் முக்கிய பேட்ஸ்மேனான ஹென்ரிச் ஹால்சன் விக்கெட்டை ஆவேஷ் கான் வீழ்த்தினார். 21 ரன்கள் அடித்திருந்த அவரை அற்புத பிளையிங் கேட்ச் மூலம் வெளியேற்றினார் சாய் சுதர்சன். இந்த தருணம் போட்டியின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
இந்திய பவுலர்களில் சிறப்பாக பந்து வீசிய அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஸ்பின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அக்ஷர் படேல், முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
108 ரன்கள் அடித்து இந்த போட்டியை வெற்றி பெற காரணமாக அமைந்த சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர் முழுவதும் சிறப்பான பவுலிங் மூலம் தென் ஆப்பரிக்கா பேட்ஸ்மேன்களை மிரட்டிய அர்ஷ்தீப் சிங் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.