IND W vs AUS W: சூப்பரான பவுலிங், பேட்டிங்! ஆஸ்திரேலியா மகளிரை புரட்டி எடுத்த இந்திய மகளிர்
இந்தியா மகளிர் – ஆஸ்திரேலியா மகளிர் இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மும்பையிலுள்ள டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா மகளிர் 19.2 ஓவரில் 141 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. இந்திய மகளிர் அணி சிறப்பாக பந்து வீச, ஆஸ்திரேலியா மகளிர் பேட்டர்கள் ரன் குவிப்பதற்கு திணறினர்
நான்கு பேர் மட்டும் இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். ஒரு நாள் தொடரில் ஆட்ட நாயகி விருது வென்ற ஃபோப் லிட்ச்ஃபீல்ட் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக எலிசா பெர்ரி 37 ரன்கள் எடுத்தார்.
இந்திய மகளிர் பவுலர்களில் அற்புதமாக பந்து வீசிய டைடஸ் சாது வெறும் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷ்ரேயங்கா பாடீல், தீப்தி ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து 142 ரன்களை சேஸ் செய்ய களமிறங்கிய இந்திய மகளிர் 17.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து 14 பந்துகள் வெற்றி பெற்றது.
இந்திய மகளிர் ஓபனர்கள் இருவரும் அரைசதமடித்தனர். ஸ்மிரிதி மந்தனா 54 ரன்கள் அடித்து அவுட்டானார். மற்றொரு ஓபனர் ஷெபாலி வர்மா 64 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பவுலிங் செய்த டைடஸ் சாது ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.