இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் : வருவாய்த்துறை அலுவலர்கள் அறிவிப்பு..!

தமிழ்நாடு முழுவதும் நடைபெறக்கூடிய வேலைநிறுத்த போராட்டத்தில் 14,000 வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறையில் அனைத்து நிலைகளிலும் உள்ள அலுவலர்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய வருவாய்த் துறையினர் இன்று (பிப். 27) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது. வருவாய்த்துறையினரின் போராட்ட விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தீர்வு காண கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகள் வருமாறு., வருவாய்த்துறையில் நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக பணியிறக்கம் பெற்ற அலுவலர்களுக்கான பணி பாதுகாப்பு அரசாணை வெளியிட வேண்டும். இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்றம் தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது.
இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகியோருக்கிடையே ஒருங்கிணைந்த முதுநிலை நிர்ணயம் செய்வதில் ஏற்படுத்தப்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்திட, மனிதவள மேலாண்மைத்துறை மூலமாக உரிய தெளிவுரை வழங்கிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை பணிக்கென சிறப்பு பணியிடங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைப் பிரிவில் 31.3.2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் உள்ள பயன்பாட்டிற்கு தகுதியற்ற ஈப்புகளை கழிவு செய்து, அவற்றிற்கு ஈடாக புதிய ஈப்புகளை உடனடியாக வழங்கிட வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள, முழுமையான நிதி ஒதுக்கீட்டினை உடனடியாக வழங்கிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வழியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.