India 1st Innings: வரலாறு படைத்தார் கே.எல்.ராகுல்!-245 ரன்களில் முடிவுக்கு வந்தது இந்தியாவின் முதல் இன்னிங்ஸ்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஒன் மேன் ஆர்மியாக போராடிய கே.எல்.ராகுல் சதம் விளாசினார். அதைத் தொடர்ந்து ஆட்டமிழந்தார். இந்தியாவும் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, 245 ரன்களில் ஆட்டமிழந்தது.

இதையடுத்து, இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. விராட் கோலி, 38 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்கள் விளாசினர். பிற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.

ஆனால், விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் மட்டும் நிதானமாக விளையாடி அணிக்கு நம்பிக்கை சேர்த்தார். அத்துடன், சென்சூரியனில் 2 டெஸ்ட் சதங்கள் அடித்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற வரலாற்றையும் படைத்தார்.

அத்துடன், தென்னாப்பிரிக்காவில் 2 டெஸ்ட் அடித்துள்ள ராகுலுக்கு இது டெஸ்டில் 8வது சதம் ஆகும். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் அதாவது சுருக்கமாக SENA countries என்றழைக்கப்படும் நாடுகளில் டெஸ்டில் சதம் விளாசிய 2வது விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்தார் ராகுல்.

இவர் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியபோது விராட் கோலி உள்பட சக வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி வாழ்த்தினர்.

முன்னதாக, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 208 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறி வந்தது.

முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் கே.எல்.ராகுல் 70 ரன்கள் உடனும், சிராஜ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இன்று 2வது நாள் ஆட்டம் காலை தொடங்கியது. கே.எல்.ராகுல் நிதானமாக செயல்பட்டு சதம் விளாசினார். 101 ரன்கள் எடுத்திருந்தபோது பர்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதற்கு முன்பே சிராஜும் நடையைக் கட்டியிருந்தார்.

தென்னாப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸை தொடங்குகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஜெய்ஸ்வால்-ரோகித் சர்மா ஜோடி ஓபனிங் இறங்கிய நிலையில், ரோகித் சர்மா 5 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 17 ரன்களிலும் அவுட் ஆகினர்.

அடுத்து களம் இறங்கிய சுப்மன் கில் 2 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்த நிலையில் சிறிது நேரம் களத்தில் நின்ற விராட் கோலியை 38 ரன்களில் ரபாடா வெளியேற்றினார். ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களிலும், அஸ்வின் 8 ரன்களிலும், ஷகுல் தாகுர் 24 ரன்களிலும், பும்ரா ஒரு ரன்னிலும் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர்.

ரபடா 5 விக்கெட்டுகளையும், பர்கர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். மார்கோ ஜான்சன், ஜெரால்டு ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இவ்வாறாக இந்திய அணி 67.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் எடுத்தது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *