ஜெய்ஸ்வால் அதிரடியால் இந்தியா 430 ரன்கள் எடுத்து டிக்ளேர் – இங்கிலாந்திற்கு 557 ரன்கள் இலக்கு!
ராஜ்கோட்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 445 ரன்கள் எடுத்தது. இதில் ரோகித் சர்மா 131 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய இங்கிலாந்து 319 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 126 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில், ரோகித் சர்மா 19 ரன்களில் வெளியேறினார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 104 ரன்கள் எடுத்திருந்த போது ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியே சென்றார்.
அதன் பிறகு சுப்மன் கில் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். 3ஆம் நாளில் இந்திய அணி 196 ரன்கள் குவித்து 322 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. பின்னர் 4ஆவது நாளை கில் மற்றும் குல்தீப் யாதவ் தொடர்ந்தனர். இதில், கில் 91 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார். இதையடுத்து விளையாடிய குல்தீப் யாதவ் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மீண்டும் வந்த ஜெய்ஸ்வால் மற்றும் சர்ஃபராஸ் கான் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஆண்டர்சன் வீசிய ஒரெ ஓவரில் ஜெய்ஸ்வால் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசினார். ஒரு கட்டத்தில் 150 ரன்கள் எடுத்த ஜெய்ஸ்வால் அதனை இரட்டை சதமாகவும் மாற்றினார். ஜெய்ஸ்வால் 231 பந்துகளில் 200 ரன்கள் குவித்து இங்கிலாந்திற்கு எதிராக ஒரே சீரிஸில் அடுத்தடுத்த போட்டிகளில் 2ஆவது முறையாக இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார். இதே போன்று சர்ஃபராஸ் கானும் அரைசதம் அடித்தார்.
இறுதியாக ஜெய்ஸ்வால் 214 ரன்கள் எடுக்க, சர்ஃப்ராஸ் கான் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலமாக இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 430 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலமாக இங்கிலாந்து அணிக்கு 556 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.