பாகிஸ்தானுக்கான ராவி நதி நீர் ஓட்டத்தை நிறுத்திய இந்தியா.. இதனால் ஜம்மு காஷ்மீர் எப்படி பயனடையும்?
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ராவி நதி ஓடுகிறது. இந்த நதி இந்தியாவுக்கு சொந்தமானது தான் என்றாலும் இந்த நதியில் இருந்து குறிப்பிட்ட அளவு நீர் பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்த நதியின் குறுக்கே ஷோபூர் கண்டி தடுப்பணையை கட்டும் பணியை இந்தியா மேற்கொண்டு வந்தது. ஆனால் பல்வேறு சிக்கல்களால் இந்த தடுப்பணையின் கட்டுமான பணிகள் தாமதமான நிலையில் தற்போது இந்த பணிகள் முடிவடைந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பாகிஸ்தானுக்கான ராவி நதி நீர் ஓட்டத்தை இந்தியா முழுமையாக நிறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. சரி இதனால் ஜம்மு காஷ்மீர் எப்படி பயனடையும் என்று விரிவாக பார்க்கலாம்.
சிந்துநதி நீர் ஒப்பந்தம்
கடந்த 1960-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ராவி, சட்லெஜ், பியாஸ் ஆகிய 3 நதிகள் மீதான உரிமை இந்தியாவுக்கும், சிந்து, ஜீலம், செனாப் ஆகிய 3 நதிகள் மீதான உரிமை பாகிஸ்தானுக்கும் வழங்கப்பட்டது. 1979 ஆம் ஆண்டில், பஞ்சாப் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசாங்கங்கள் பாகிஸ்தானுக்கு தண்ணீரைத் தடுக்க ரஞ்சித் சாகர் அணை மற்றும் கீழ்நிலை ஷாபூர் கண்டி தடுப்பணை கட்டுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தத்தில் ஜம்மு காஷ்மீர் முதல்வராக இருந்த ஷேக் முகமது அப்துல்லாவும், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலும் கையெழுத்திட்டனர். 1982 ஆம் ஆண்டில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த தடுப்பணை கட்டுமான பணிகள் 1998 இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கட்டுமான பணியில் தாமதம்
ரஞ்சித் சாகர் அணையின் கட்டுமானம் 2001 இல் நிறைவடைந்த நிலையில், ஷாபூர் கண்டி தடுப்பணை கட்டுமான பணியில், தாமதம் ஏற்பட்டதால், ராவி நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தொடர்ந்து தண்ணீர் சென்றது. 2008-ம் ஆண்டு ல், ஷாபூர் கண்டி திட்டம் தேசிய திட்டமாக அறிவிக்கப்பட்டது, ஆனால் கட்டுமானப் பணிகள் 2013 இல் தொடங்கியது. ஆனால் 2014 இல் பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் இடையேயான மோதல்கள் காரணமாக திட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டது. பின்னர் 2018-ம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இந்த சூழலில் இந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் எப்படி பயனடையும்?
ஷாபூர் தடுப்பணை கட்டுமான பணிகள் முடிந்துவிட்டதால் இனி ராவி நதிநீர் பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ராவி நதி பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் எல்லை ஒட்டி செல்கிறது. தற்போது இந்த நதியில் இருந்து பாகிஸ்தானுக்கான நீர் ஓட்டம் தடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீருக்கு 1,150 கன அடி தண்ணீர் கிடைக்கும் என்றும், ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள 32,000 ஹெக்டே விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் கூறப்படுகிறது. ஜம்மு-காஷ்மீர் அணையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் நீர் மின்சாரத்தில் 20 சதவீதத்தைப் பெற முடியும்.
55.5 மீட்டர் உயரமுள்ள ஷாபுர்கண்டி அணையானது 206 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு நீர் மின் திட்டங்களை உள்ளடக்கிய பல்நோக்கு நதி பள்ளத்தாக்கு திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது ரஞ்சித் சாகர் அணை திட்டத்தின் கீழ் 11 கிமீ தொலைவில் ராவி ஆற்றில் கட்டப்பட்டுள்ளது, ஜம்மு மற்றும் காஷ்மீர் தவிர, அணையில் இருந்து வரும் நீர் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானுக்கும் உதவும் என்று கூறப்படுகிறது.