ஆளுநர்களின் மலிவான, தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போதுதான் காண்கிறது – மு.க.ஸ்டாலின்ஆவேசம்
இளைஞர் அணி மாநாடு வருகிற 21ஆம் தேதி சேலத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டையொட்டி திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்கிற இலட்சியத்தைக் கொண்டுள்ள நமது திராவிட மாடல் அரசின் சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் தமிழ்நாட்டு மக்களின் மனதில் மகிழ்ச்சி பொங்குகிற வகையில் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு இவற்றுடன் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. அனைத்துத் தரப்பு மக்களும் கொண்டாடும் திருநாள்தான் பொங்கல் விழா.
அதனைத் தமிழர் திருநாள் என்று இன உணர்வும் மொழி உணர்வும் கொண்ட பண்பாட்டுத் திருவிழாவாக மாற்றிய பெருமை திராவிட இயக்கத்திற்குரியது. மத வெறியை – சாதிய வன்மத்தை – மொழி ஆதிக்கத்தை இங்கே விதைக்க நினைப்போருக்கு ஒருபோதும் இந்த மண்ணில் இடமில்லை என்பதைக் காட்டும் வகையிலும் சமூகநீதி இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ‘சமத்துவப் பொங்கல்’ விழாவைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடுமாறு உங்களில் ஒருவனான நான் அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
ஆளுநர்களை வைத்து அரசாங்கம்
உங்களுக்கு அன்புக் கட்டளையிடும்போது, அதனை முதலில் செயல்படுத்தக் கூடியவனாக நான் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நான் மறப்பதில்லை. அதனால், எனது கொளத்தூர் தொகுதியில் சமத்துவப் பொங்கல் விழாவைப் பல்வேறு மதத்தினர், பல மொழியினர் சூழக் கொண்டாடி மகிழ்ந்தேன். அதுபோலவே, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நம்முடைய கழக நிர்வாகிகள் சமத்துவப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிய செய்திகள் தொடர்ந்து வந்தபோது சர்க்கரைப் பொங்கலாக இதயம் இனித்தது. அதனை அரசியல் களத்தில் எடுத்துரைக்கும் வகையில், சேலம் மாநகரில் ஜனவரி 21-ஆம் நாள் மிகுந்த எழுச்சியுடன் நடைபெறவிருக்கிறது கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு.
கழகத் தலைமையின் சுமையைப் பங்கிட்டுக் கொள்ளும் அணியாக இளைஞரணி எப்போதும் முன்னிற்பது வழக்கம். இப்போதும் அந்த வழிமுறைப்படி, 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் சூழலில், ஜனநாயகப் போர்க்களத்திற்குக் கழக வீரர்களை ஆயத்தப்படுத்தும் பயிற்சிப் பாசறையாக அமையவிருக்கிறது, சேலத்தில் நடைபெறும் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு. இது கூடிக் கலையும் நிகழ்வல்ல; கொள்கையைக் கூர் தீட்டும் உலைக்களம்! மாநில உரிமை முழக்கத்தை முன்னெடுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு. பத்தாண்டுகால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பலவும் பறிபோய்விட்டன.
கல்வி உரிமை, மொழி உரிமை, நிதி உரிமை, சட்ட உரிமை என மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய அரசு அபகரிக்கும் போக்கு தொடர்வதையும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான அராஜகப் போக்கு மிகுவதையும் காண்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குப் போட்டியாக, நியமனப் பதவியில் உள்ள ஆளுநர்களை வைத்து அரசாங்கத்தை நடத்த நினைக்கும் எதேச்சாதிகாரப் போக்கு என்பது மாநிலங்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானதாகும்.
தெருவில் செல்பவர்கள் மீது காவிச்சாயம்
ஆளுநர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பொறுப்புக்குச் சிறிதும் தகுதியில்லாதவர்களாக, மலிவான – தரம்தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போதுதான் காண்கிறது. ஆன்மீக உணர்வுகளை அரசியலாக்கி மதவெறியைத் தூண்டுவது, இந்தி – சமஸ்கிருதத்தைத் திணித்துத் தமிழ் உள்ளிட்ட அவரவர் தாய்மொழிகளையும் அதன் பண்பாட்டையும் சிதைப்பது,
திருவள்ளுவரில் தொடங்கி தெருவில் நடந்து போவோர் வரை எல்லார் மீதும் காவிச் சாயம் பூசுவது என்பதை ஒன்றிய ஆட்சியாளர்களே முன்னின்று செய்கின்ற மூர்க்கத்தனமான அரசியலை ஜனநாயக வழியில் முறியடிக்கும் வலிமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. அதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர – அவசிய தேவை இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய அளவில் சேலத்தில் கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது.
இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட திமுக மாநாடு
சென்னையையும் பிற மாவட்டங்களையும் கடுமையாகப் பாதித்த மிக்ஜாம் புயல் – மழை காரணமாகவும், தென்மாவட்டங்களில் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய வரலாறு காணாத மழை – வெள்ளத்தினாலும் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட இளைஞரணி மாநில மாநாடு, ஜனவரி 21-இல் சேலத்தில் எழுச்சியுடன் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாண்புமிகு இளைஞரணிச் செயலாளரும் இளைஞர் நலன் – விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான தம்பி உதயநிதி முன்னெடுத்து வருகிறார்.
இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் அவருக்குத் தோளோடு தோள் நின்று பணியாற்றுவதைக் காண்கிறேன். அதுபோலவே, சேலம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள கழக முதன்மைச் செயலாளர் – மாநாடுகளைச் சிறப்பாக நடத்திக்காட்டுவதில் வல்லவரான மாண்புமிகு கே.என்.நேரு அவர்களும், சேலம் மாவட்டக் கழக நிர்வாகிகளும் பந்தல் அமைப்பு தொடங்கி அனைத்து ஏற்பாடுகளையும் இரவு – பகலாக மேற்கொண்டு வருகிறார்கள்.
இருண்ட காலத்தில் இருந்து இந்தியாவை மீட்டெடுக்கனும்
மாநாட்டு நாள் நெருங்கி வரும் நிலையில், உங்களில் ஒருவனான நான் இந்த மடலை எழுதுகிறேன். நாடாளுமன்றத் தேர்தலும் நெருங்கி வருகிறது. ஜனநாயகத்தின் அடர்ந்த இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம் நிறைந்த காலத்தினை மக்கள் காண்பதற்கு இந்தியா கூட்டணியின் முன்னெடுப்புகள் தொடங்கியுள்ளன.
இந்தப் பொருத்தமான சூழலில்தான், மாநில உரிமை மீட்பு முழக்கத்தினை மையமாகக் கொண்டு இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது. தம்பி உதயநிதி அழைக்கிறார். கழக உடன்பிறப்புகளே சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் திரண்டிடுவீர். நான் முன்பே சொன்னதுபோல கடல் இல்லாச் சேலம் மாவட்டம், கருப்பு – சிவப்புக் கடல் ஆகட்டும். இந்தியாவின் ஒளிமிகுந்த புது வரலாற்றை இளைஞரணி படைக்கட்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.