இந்தியா – மாலைதீவு முறுகல் நிலை: இந்தியாவுக்கு ஆதரவாக ஒலித்த குரல்
இந்தியாவுடனான உறவை மாலைதீவு முறித்துக் கொள்வது சாத்தியமில்லை என மாலைதீவின் முக்கிய எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் (எம்டிபி) தலைவரும், ஐ.நா. சபை முன்னாள் தலைவருமான அப்துல்லா சாஹித் தெரிவித்துள்ளார்.
புதிதாக மாலைதீவு வெளியுறவுக் கொள்கைகளில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பிலும் இந்தியாவுடனான உறவின் முக்கியத்துவம் பற்றியும் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா – மாலைதீவு உறவு தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம்
மாலைதீவுடனான இந்தியாவின் உறவுவானது வரலாற்று ரீதியாக, கலாச்சார ரீதியாக மற்றும் பல்வேறு வழிகளில் நீடித்து வருகின்ற நிலையில் புவியியல் ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியாவிடமிருந்து தூரம் விலகிச் செல்வது இயலாத விடயம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, கடந்த 60 ஆண்டுகளாக உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது.
அந்த முன்னேற்றத்தினால் மாலைதீவும் பயன்பெறும் வகையிலான அனைத்து வழிகளையும் ஆராயும் விதத்தில் தமது கொள்கைகள் அமைய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், 2004 ஆம் ஆண்டு சுனாமியால் ஏற்பட்ட பேரிடர்களில் மாலைதீவுக்கு முதல் நாடாக இந்தியா உதவிக்கரம் நீட்டியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.