ஆப்கனுக்கு எதிரான முதல் டி20-யில் இந்திய அணி 6 விக். வித்தியாசத்தில் வெற்றி!!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியின் ஷிவம் துபே சிறப்பாக விளையாடி 40 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆப்கன் அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் -இப்ராகிம் சத்ரான் ஆகியோர் களத்தில் இறங்கினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். குர்பாஸ் 23 ரன்னிலும், சத்ரான் 25 ரன்னிலும் வெளியேற அடுத்து வந்த அஸ்மதுல்லா 29 ரன்கள் எடுத்தார்.

அனுபவ வீரர் முகமது நபி 27 பந்துகளில் 3 சிக்சர் 2 பவுண்டரியுடன் 42 ரன்கள் எடுத்தார். ரஜிமுல்லா 19 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான் அணி 158 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில், கேப்டன் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.

மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் அதிரடியாக 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். திலக் வர்மா 26 ரன்கள் சேர்க்க விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். விக்கெட்டுகளை ஒருபக்கம் விழுந்தாலும் அதிரடி பேட்டிங்கை தொடர்ந்த ஷிவம் துபே 40 பந்துகளில் 2 சிக்சர் 5 பவுண்டரியுடன் 60 ரன்கள் எடுத்தார்.

ரிங்கு சிங் 9 பந்துகளில் 16 ரன்கள் சேர்க்க 17.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா மற்றும் ஆப்கன் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டி20 கிரிக்கெட் போட்டி 14 ஆம் தேதி ஞாயிறன்று மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெறுகிறது.

 

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *