முதல் டெஸ்டை கன்ட்ரோலில் எடுத்த இந்தியா… விழிபிதுங்கி நிற்கும் இங்கிலாந்து பவுலர்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு இளம் வீரர் ஜெய்ஷ்வால் அதிரடியான தொடக்கம் தந்தார். முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பு 119 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாளிலும் சிறப்பான ஆட்டத்தைத் தொடங்கிய இந்தியா நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜெய்ஸ்வால் 80 ரன்களும், கே.எல்.ராகுல் 86 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் தன் பங்குக்கு 41 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த, ரவீந்திர ஜடேஜாவும், அக்சர் படேலும் , இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டனர். ஜடேஜா 81 ரன்களும், அக்சர் படேல் 35 ரன்களும் எடுத்த நிலையில், 2வது நாள் முடிவுக்கு வந்தது.
7 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்துள்ள இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை விட 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கை ஓங்கியுள்ளது.