இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட் நடைபெறும் ஹைதெராபாத் மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் ரிப்போர்ட்
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி துவங்குகிறது.
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டி20 போல அதிரடியாக விளையாடி இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து தோற்கடித்து சாதனை படைக்கும் முனைப்புடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.
மறுபுறம் 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடை போடும் இந்தியா இம்முறையும் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வெல்லும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் முதல் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் காலை 9. 30 மணிக்கு துவங்குகிறது.
ஹைதெராபாத் மைதானம்:
கடந்த 2004இல் தோற்றுவிக்கப்பட்ட இந்த மைதானத்தில் 2010 முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் இதுவரை நடைபெற்றுள்ள 5 போட்டிகளிலும் விளையாடியுள்ள இந்தியா 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 1 போட்டி டிராவில் முடிந்துள்ளது. அந்த வகையில் கோட்டையாக திகழும் இந்த மைதானத்தில் இந்தியா முதல் முறையாக இங்கிலாந்தை இப்போது தான் எதிர்கொள்கிறது. இந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் (510) அடித்த வீரராக செடேஸ்வர் புஜாரா சாதனை படைத்துள்ளார்.
அதிக சதங்கள் அடித்த வீரர்களாக புஜாரா மற்றும் முரளி விஜய் (தலா 2) முதலிடத்தில் இருக்கும் நிலையில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரராக ப்ரெண்டன் மெக்கல்லம் (225, இந்தியாவுக்கு எதிராக, 2010) சாதனை படைத்துள்ளார். அதே போல இங்கு அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை (27) எடுத்த வீரராகவும் சிறந்த பவுலிங்கை (6/31) பதிவு செய்த வீரராகவும் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்துள்ளார். இங்கு அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் பதிவு செய்துள்ள அணி : 687/6 இந்தியா வங்கதேசத்துக்கு எதிராக, 2017
வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் 5 நாட்களும் ஹைதராபாத் நகரை சுற்றிய பகுதிகளில் மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை மையம் தெரிவிப்பதால் போட்டி முழுமையாக நடைபெறலாம்.
பிட்ச் ரிப்போர்ட்:
ஹைதெராபாத் மைதானம் இயற்கையாக பேட்டிங்க்கு சாதகமாக இருந்து வருகிறது. அதே போல இந்தியாவின் மற்ற மைதானங்களை காட்டிலும் ஹைதராபாத் மைதானம் ஸ்பின்னர்களை விட வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல ஆதரவை கொடுக்கும்.