இந்தியா எங்களுக்கு கடும் சவால் அளிக்கும்.. நாங்கள் சோதிக்கப்படுவோம்- இங்கி. பயிற்சியாளர் மெக்குல்லம்
இந்தியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் கடும் சவால்களை கொடுக்கும் என்று இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிராண்டன் மெக்குல்லம் தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது.
ஹைதராபாத் என்பது மெக்குல்லத்திற்கு மிகவும் பிடித்த மைதானம் ஆகும். இங்கு 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில், நியூசிலாந்து அணியின் தொடக்க வீராக களம் இறங்கிய மெக்குல்லம் 225 ரன்கள் குவித்தார்.
இந்த நிலையில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு அதே ஹைதராபாத்துக்கு தற்போது பயிற்சியாளராக திரும்பி இருக்கிறார். ஹைதராபாத் ஆடுகளம் குறித்து பேசிய மெக்குல்லம், ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருப்பதாகவும், முதல் பந்தில் இருந்து திரும்பாது என்றாலும் நிச்சயம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக தான் ஆடுகளம் தயாரிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர் இந்த தொடர் முழுவதுமே சுழற் பந்து வீச்சு என்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நான் இங்கிலாந்து அணி பயிற்சியாளராக தன்னுடைய பணியை தொடங்கும் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் மக்களுக்கு பொழுதுபோக்கை தங்களால் முடிந்த அளவு கொடுக்க வேண்டும் என்பதை நினைத்தோம். அப்படி அதிரடியாக ஆடும் போது எங்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்தது.
தற்போது அதிரடியாக விளையாடுவதற்கு இந்தியாவை தவிர ஏற்றவேறு நாடு ஏதேனும் இருக்கிறதா? நாங்கள் இந்தியாவில் விளையாடும் போது உலகம் முழுவதும் பல ரசிகர்கள் இந்த போட்டியை பார்ப்பார்கள். இது நிச்சயம் எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஆகும். இந்தியா என்பது வாய்ப்புகளின் பூமியாகும். இந்த வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பது உற்சாகத்தையும் கொடுக்கிறது.
இந்த போட்டி எவ்வளவு நாள் நடைபெறும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எங்கள் இரு அணிகளும் தங்களுக்கு உரிய ஸ்டைலில் விளையாடுவார்கள். எப்படி ஆசஸ் தொடர் இரு பலம் வாய்ந்த அணிகளுக்கு இடையே நடந்த போட்டியாக இருந்ததோ, அதை போல் இந்த தொடரும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவின் 20 விக்கெட்டுகளை நாங்கள் ஒவ்வொரு டெஸ்டிலும் வீழ்த்த வேண்டும்.
இந்தியாவை விட ஒரு ரன் கூடுதலாக பேட்டிங் அடிக்க வேண்டும். இது ஒன்றும் ராக்கெட் தொழில்நுட்பம் இல்லை. இதுதான் போட்டியின் வெற்றி அம்சமே. இந்தத் தொடர் எங்களுக்கு கடும் சவால்களை கொடுக்கும். எங்களுடைய யுத்தி இந்த தொடரில் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்படும். இதனால் தான் இந்த தொடர் எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது என்று மெக்குல்லம் கூறியுள்ளார்.