2023 இல் 12,000 கோடிகளை தாண்டிய இந்திய சினிமா வர்த்தகம்

ஒவ்வொரு வருடமும் இந்திய சினிமா வர்த்தகம் எத்தனை ஆயிரம் கோடிகள் என்பதை ஆர்மேக்ஸ் மீடியா புள்ளிவிவரங்களுடன் தெரியப்படுத்தி வருகிறது. சென்ற வருடம், முதல்முறையாக இந்திய சினிமா வர்த்தகம் 12,000 கோடிகள் என்ற இலக்கை கடந்துள்ளது. இந்தி சினிமா இந்த வர்த்தக பங்களிப்பில் முதலிடத்தில் உள்ளது.

கொரோனா பேரிடருக்குப் பின் இந்தி சினிமா தோல்விகளை மட்டுமே கண்டு வந்தது. இந்நிலையில், இந்த வருட ஆரம்பத்தில் வெளியான ஷாருக்கானின் பதான் 500 கோடிகளைக் கடந்து இந்தி சினிமா உலகிற்கு புத்துணர்ச்சி அளித்தது. தொடர்ந்து வெளியான கதார் 2, ஜவான் படங்கள் வசூலை குவித்தன. இதில் ஜவான் இந்தியாவில் 600 கோடிகள் என்ற புதிய இலக்கை எட்டியது. மெகா பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி மீடியம் பட்ஜெட் படங்கள் பலவும் நல்ல வசூலைப் பெற்றன. இதன் மூலம் இந்தி சினிமா 5380 கோடி வர்த்தகத்தை செய்துள்ளது.

இதற்கு அடுத்த இடத்தில் தெலுங்கு திரையுலகம் உள்ளது. பிரபாஸின் சலார், சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா தவிர வேறு முன்னணி நடிகர்களின் படங்கள் தெலுங்கில் வெளியாகவில்லை. அதாவது மகேஷ் பாபு, ராம் சரண், ஜுனியர் என்டிஆர் நடித்தப் படங்கள் 2023 இல் திரைக்கு வரவில்லை. அப்படியிருந்தும் சுமார் 2300 கோடி வர்த்தகத்தை தெலுங்கு சினிமா பெற்றுள்ளது.

மூன்றாவது இடத்தில் தமிழ் சினிமா உள்ளது. ஜெயிலர், லியோ படங்கள் சென்ற ஆண்டு முக்கிய பங்களிப்பை செய்தன. தமிழ் சினிமாவின் 2023 வருட வர்த்தக பங்களிப்பு சுமார் 1900 கோடிகள். இதில் ஜெயிலர், லியோ படங்களின் மூலம் கிடைத்தது மட்டும் சுமார் 1300 கோடிகள். ஹாலிவுட் சினிமாக்கள் மூலம் கிடைத்தது 1139 கோடிகள், மலையாள சினிமாவின் பங்களிப்பு 572 கோடிகள், கன்னட சினிமாவின் பங்களிப்பு 312 கோடிகள், 2022 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 இல் இந்தி திரைப்பட வர்த்தகம் 53 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதேநேரம் கன்னட சினிமா வர்த்தகம் 61 சதவீதம் குறைந்துள்ளது. 2024 இல் தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்கள் மகேஷ் பாபு, ராம் சரண், ஜுனியர் என்டிஆர், பவன் கல்யாண், சிரஞ்சீவி ஆகியோர்களின் படங்கள் வெளியாகின்றன. இதில் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் ஏற்கனவே வெளியாகிவிட்டது. எதிர்பாராத சர்ப்ரைஸாக ஹனு மான் திரைப்படமும் மெகா வசூலை பெற்று வருகிறது. இதனால், 2024 இல் தெலுங்கு சினிமாவின் வர்த்தகம் 5000 கோடிகளைத் தாண்டும் என கணித்துள்ளனர்.

தமிழில் கேப்டன் மில்லர், அயலான் படங்களைத் தொடர்ந்து லால் சலாம், தங்கலான், கங்குவா, விடாமுயற்சி, இந்தியன் 2, வேட்டையன் என பல முக்கிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இதனால், 2024 இல் தமிழ் சினிமா வர்த்தகம் 3000 கோடிகளைத் தாண்ட வாய்ப்புள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *