Indian Cookery: `சட்னி, ரொட்டி, பிரியாணி…’ – ஒரு புத்தகம்; 4 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனை
பசி, மனிதர்கள் வாங்கி வந்த வரம். மூன்று வேளையும் பசிக்கத்தான் செய்யும் என்பதற்காக எதையாவது எல்லோரும் சாப்பிடுவதில்லை. சுவையான உணவுகளைத் தேடி ஓடுகிறோம்.
சென்னை அம்பத்தூரில் இருக்கும் ஒருவர், யூடியூபில் பார்த்த மெஸ்ஸைத் தேடி மயிலாப்பூருக்கு வருகிறார். யாரோ சொன்னார் என்பதற்காக, மயிலாப்பூரில் இருப்பவர் மதுரவாயிலிலிருக்கும் ஹோட்டலைத் தேடி வருகிறார். இதற்கெல்லாம் காரணம் நம் நாக்கு விதவிதமான ருசியை நாடுவதுதான்.
ருசித்துச் சாப்பிடுவது மனிதர்களின் இயல்பு; அது ஒரு ரசனை. அதுதான் உலகமெங்கும் விதவிதமான உணவு வகைகளை ஒவ்வொரு நாளும் கண்டுபிடிக்கவைக்கிறது. உலகின் `டாப் செஃப்’களை அடையாளம் காட்டுகிறது. டி.வி-யில் செஃப் தாமுவின் நிகழ்ச்சியைத் தவறாமல் பார்க்கவைக்கிறது. யூடியூபில் வெங்கடேஷ் பட் புதிதாக என்ன ரெசிபி செய்து அசத்தியிருக்கிறார் என்று தேடவைக்கிறது.
இன்றைக்கு யார் வேண்டுமானாலும், மொபைல்போனில் சமையல் குறிப்புகளைப் பார்த்தபடியே மணக்க மணக்க ஒரு வத்தக்குழம்போ, கமகமக்கும் சிக்கன் பிரியாணியோ, தெருவையே வாசனையில் ஆழ்த்தும் கல்யாண சாம்பாரோ செய்துவிட முடியும்.
என்ன ஒன்று… மெனக்கெடல் வேண்டும். பொறுமை வேண்டும். ஈடுபாடும் அக்கறையும் வேண்டும். மற்றவர்களுக்காக அன்பைக் குழைத்துச் செய்கிற கைப்பக்குவம் வேண்டும்.