பிரித்தானிய மருத்துவமனையின் தவறான முடிவால் தற்கொலை செய்துகொண்ட இந்தியப் பெண் மருத்துவர்
பிரித்தானியாவின் பர்மிங்காமிலுள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் ஜூனியர் மருத்துவராக பணியாற்றிவந்தவர் Dr வைஷ்ணவி குமார் (Dr Vaishnavi Kumar, 41).
அங்கு தன் சக மருத்துவர்கள் தன்னை அலட்சியமாக நடத்துவதாகவும், பணிச்சூழல் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும் தனது பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் Dr வைஷ்ணவி.
மருத்துவமனையின் தவறான முடிவு
Dr வைஷ்ணவி, கொரோனா காலகட்டத்தில் Sandwell மற்றும் West Birmingham மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளார். அதே மருத்துவமனைகளுக்கு முதன்மை மருத்துவ பதிவாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அவர்.
சரி, பணிச்சூழல் மோசமாக உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் இருந்து தப்பும் வாய்ப்பு வந்துவிட்டது என வைஷ்ணவி மகிழ்ச்சியடைந்திருந்த நேரத்தில், அவர் மேலும் ஆறு மாதங்கள் ராணி எலிசபெத் மருத்துவமனையில் பயிற்சி பெறவேண்டுமென அவருக்கு அறிவிப்பு வந்துள்ளது.
தற்கொலை முடிவெடுத்த மருத்துவர்
இன்னும் ஆறு மாதங்கள் இதே மருத்துவமனையில் பணியாற்றவேண்டுமா என எண்ணிய வைஷ்ணவி, தன் பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அந்த கடிதத்தில், தனது மரணத்துக்கு ராணி எலிசபெத் மருத்துவமனைதான் முழுமையான காரணம் என எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட வைஷ்ணவி, தான் இறந்தால் தனது உடலைக்கூட மீண்டும் அந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லக்கூடாது என கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மன்னிப்புக் கோரியுள்ள மருத்துவமனை
தன் மகள் ராணி எலிசபெத் மருத்துவமனையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டிருந்தால் அவர் இன்னமும் உயிரோடிருந்திருப்பார் என்கிறார் வைஷ்ணவியின் தந்தையான Dr ரவி குமார் (Dr Ravi Kumar).
இந்நிலையில், வைஷ்ணவி கூடுதலாக ஆறு மாதங்கள் பயிற்சி பெறத் தேவையில்லை என்றும், அவருக்கு தவறுதலாக அந்த அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ள இங்கிலாந்து மருத்துவ அமைப்பு மற்றும் பயிற்சி அலுவரான Dr Navina Evans, நடந்த தவறுகளுக்காகவும், அதன் விளைவாக வைஷ்ணவியின் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இழப்புக்காகவும் மன்னிப்புக் கோருவதாக தெரிவித்துள்ளார்.