ராஞ்சி வந்த இந்திய ஹாக்கி வீராங்கனைகள்.. நேரில் வந்து ஆதரவளித்து மரியாதை.. இதுதான் தல தோனி!
ஜெர்மனி மகளிர் அணிக்கு எதிரான ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கான ஹாக்கி போட்டியில் கலந்து கொண்ட இந்திய மகளிர் அணிக்கு, கிரிக்கெட் ஜாம்பவான் தோனி கலந்து கொண்டு ஆதரவளித்துள்ளார்.
சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி ஐபிஎல் தொடருக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஜனவரி முதல் வாரத்திலேயே பேட்டிங் பயிற்சியை தொடங்கிய தோனி, ராஞ்சியில் இருந்தே பயிற்சியை செய்து வருகிறார். தனது வீட்டிலேயே உடற்பயிற்சி கூடத்தில் தேவையான ஃபிட்னஸ் பயிற்சிகளை மேற்கொள்ளும் தோனி, பின்னர் பேட்டிங் பயுற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வந்தது. அதேபோல் டிசம்பர் மாத இறுதி வரை பல்வேறு விளம்பர நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்து வந்த தோனி, சில வாரங்களுக்கு முன் ரிஷப் பண்ட் சகோதரியின் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்றார். அதேபோல் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக துபாய் சென்று திரும்பினார்.
ஆனால் பயிற்சியை தொடங்கிய பின் தோனி எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் எஃப்ஐஹெச் மகளிர் ஒலிம்பிக் குவாலிஃபயர் ஹாக்கி தொடர் நடைபெற்றது. இதன் அரையிறுதி போட்டியில் இந்திய மகளிர் அணியை எதிர்த்து ஜெர்மனி மகளிர் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் வென்றால் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு நேரடி தகுதிபெற முடியும் என்பதால், முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமைந்தது.
இந்த போட்டி ராஞ்சியில் நடைபெற்றதால் தோனி நேரில் வந்து இந்திய வீராங்கனைகளுக்கு ஆதரவளித்தார். தொடர்ந்து இந்தியா – ஜெர்மனி இடையிலான ஆட்டம், முழு நேர முடிவில் 2-2 என்று சமனில் முடிவடைந்தது. இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் ஜெர்மனி அணி 4-3 என்ற கணக்கில் வென்றது. கடைசி வரை போராடிய இந்திய மகளிர் அணி, சிறிய தவறால் வெற்றியை பறிகொடுத்தது.
இந்திய அணி விளையாடிய சில போட்டிகளை மட்டுமே தோனி நேரில் கண்டுள்ளார். ஆனால் ராஞ்சி மைதானத்தில் போட்டிகள் நடத்தப்பட்டால், நிச்சயம் இந்திய வீரர்களை நேரில் சென்று பார்க்கும் வழக்கத்தை தோனி வைத்துள்ளார். அந்த வகையில் ராஞ்சியில் நடைபெற்ற ஹாக்கி போட்டியையும் நேரில் பார்த்து தோனி ஆதரவளித்த சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது.