லண்டனில் இளம் மனைவியை கொலை செய்த இந்திய வம்சாவளியினர்: சமீபத்திய தகவல்

லண்டனில் தன் இளம் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த இந்திய வம்சாவளியினர் ஒருவர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

19 வயதுப் பெண் படுகொலை
இந்தியாவின் பஞ்சாபிலுள்ள Jogi Cheema என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் மேஹாக் ஷர்மா (19) என்னும் இளம்பெண். New Sant Nagar என்னுமிடத்தைச் சேந்த சாஹில் ஷர்மா (24) என்பவருக்கும் மேஹாக்குக்கும் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் திகதி திருமணம் ஆகியுள்ளது.

திருமணமாகி ஐந்தே மாதங்களில் மாணவர் விசாவில் லண்டன் வந்துள்ளார் மேஹாக். பின்னர் பணி விசா பெற்ற அவர், தனது கணவரான சாஹிலுக்கு கணவர் மனைவி விசா ஏற்பாடு செய்து அவரை லண்டனுக்கு வரவழைத்துள்ளார்.

இந்நிலையில், 2023ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 29ஆம் திகதி, பொலிசாரை அழைத்த சாஹில், தான் தன் மனைவியை கத்தியால் குத்திவிட்டதாகக் கூறியுள்ளார்.

உடனடியாக பொலிசார் அங்கு விரைய, மேஹாக் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனடியாக அவரைக் காப்பாற்றும் முயற்சியில் மருத்துவ உதவிக் குழுவினர் ஈடுபட்டும், அவரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. 20 நிமிடங்களுக்குப் பிறகு மேஹாக் உயிரிழந்துவிட்டதாக மருத்துவ உதவிக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வாழ்வு துவங்கும் முன்பே பலியான இளம்பெண்
அவரை இளம்பெண் என்று கூட கூறமுடியாது, பதின்ம வயதுப் பெண் என்று வேண்டுமானால் கூறலாம். ஆக, பத்தொன்பதே வயதில், வாழ்வு துவங்கும் முன்பே, தான் பிரித்தானியாவுக்கு வரவழைத்த தனது கணவன் கையாலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார் மேஹாக்.

இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்பட்ட மேஹாக்கின் உடல், 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரது சொந்த ஊரான பஞ்சாபிலுள்ள Jogi Cheema என்னும் கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது.

சமீபத்திய தகவல்
இந்நிலையில், வியாழனன்று கிங்ஸ்டன் க்ரௌன் நீதிமன்றத்தில் ஆஜரான சாஹில் ஷர்மா, தான் தன் மனைவியான மேஹாக் ஷர்மாவை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

என்றாலும், அவர் எதற்காக மேஹாக்கை கொலை செய்தார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி, இந்த வழக்கில் சாஹிலுக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக சனிக்கிழமையன்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *