காய்கறி வாங்குவதை குறைத்து மீன், முட்டைக்கு அதிகம் செலவு செய்யும் இந்திய மக்கள்..!
கால மாற்றத்துக்கு ஏற்ப நமது அன்றாட தேவைகளும் அதற்காக நாம் செய்யும் செலவுகளும் மாறிக் கொண்டே இருக்கின்றன. 10, 20 ஆண்டுகளுக்கு முன்னர் நம் அனைவரின் கைகளிலும் செல்போன் கிடையாது, பெருமளவில் பொழுதுபோக்குகளோ இல்லை. எனவே நமது செலவினங்கள் அதற்கேற்ப இருந்தன.
ஆனால் இப்போது நம் செலவினங்களில் 50%க்கு மேல் பொழுதுபோக்கு, ஆடை வாங்குவது போன்றவற்றுக்கு செல்கிறது என அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.
உணவுக்கான செலவை குறைத்த மக்கள்: இந்திய குடும்பங்களின் மாதாந்திர சராசரி செலவினம் குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2023 ஜூலை நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தியாவில் கிராமப்புறங்களில் சராசரியாக ஒரு குடும்பத்திற்கு ஆகும் செலவினம் 3,773 ரூபாய் என தெரிய வந்துள்ளது.
இது நகர்ப்புறங்களில் ஒரு குடும்பத்திற்கு ஆகும் சராசரியான மாதாந்திர செலவினம் 6,459 ரூபாய் ஆகும். இந்த தொகையில் 50%க்கும் மேல் ஆடை மற்றும் பொழுதுபோக்கிற்காக செல்கிறது என அந்த அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. உணவுக்காக செலவிடும் தொகை குறைந்துள்ளது.
2011-12ஆம் ஆண்டில் கிராமங்களில் உணவுக்கான செலவு 53% ஆக இருந்த நிலையில் 2022-23ஆம் ஆண்டில் 46.4%ஆக குறைந்துள்ளது. அதே வேளையில் உணவு அல்லாத மற்ற வகைகளுக்கான செலவு 2011-12இல் 47%ஆக இருந்து, தற்போது 53.6% ஆக அதிகமாகியுள்ளது.
இதுவே நகர்ப்புறங்களில் ஒப்பிட்டால் 2011-12ஆம் ஆண்டில் உணவுக்கான செலவினம் 42.6%ஆக இருந்து தற்போது 39.2%ஆக குறைந்துவிட்டது. உணவு அல்லாத செலவினங்கள் 57.4%ஆக இருந்து தற்போது 60.8%ஆக அதிகரித்துள்ளது.
இந்திய குடும்பங்கள் எதற்காக செலவிடுகின்றன என்பது குறித்த இந்த அறிக்கையானது, இந்திய குடும்பங்களின் செலவு முறை எப்படி மாறி இருக்கிறது, நுகர்வு கலாசாரம் எப்படி இருக்கிறது என்பது பற்றிய பார்வையை வழங்குகிறது.
காய்கறிகளை விட மீன், முட்டை வாங்குவது அதிகம்: கறி, மீன், முட்டை போன்றவற்றுக்கு மக்கள் செலவிடும் விகிதம் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் அதிகரித்துள்ளது. அதே போல பழங்களுக்கான செலவினம் அதிரித்துள்ளது. ஆனால் காய்கறிகளுக்காக செலவு செய்வதை மக்கள் குறைத்துவிட்டனர்.
கடந்த ஆண்டில் பாஸ்டன் கன்சல்டிங் குழுமம்(BCG) சிஐஐ உடன் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், பைகளில் அடைக்கப்பட்ட வீட்டுக்கு தேவையான பொருட்களின் விலை , மருந்துகள் ஆகியவை கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காகியுள்ளன என்றும், கல்லூரி கட்டணங்கள் அதிகளவில் உயர்ந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
2019இல் எஃப்எம்சிஜி பொருட்களுக்காக செலவு செய்ததை விட 45% கூடுதலாக மக்கள் இப்போது செலவிடுகின்றனர் என கூறி இருந்தது. 2023இல் இந்தியாவில் பிஸ்கட்டுகள், சோப்புகள், ஷாம்பூ, உள்ளிட்டவற்றுக்கு மக்கள் மொத்தமாக 5.4 டிரில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளனர்.