ஹர்திக் பாண்டியாவை விட அதிக சம்பளம் வாங்கும் இந்திய வீரர்கள்!
இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த ஆண்டுக்கான வீரர்களின் மத்திய ஒப்பந்தங்கள் பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டது. இதில் பல சர்ச்சைகள் எழுந்தது. உலக கோப்பையில் சிறப்பாக விளையாடி ஷ்ரேயாஸ் ஐயர் பெயர் இடம் பெறாமல் போனது. இஷான் கிஷன் ரஞ்சி கோப்பை போட்டிகளை விளையாட மறுத்ததால் அவரது பெயரும் இடம் பெறவில்லை. காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து விலகிய ஷ்ரேயாஸ் ஐயர், காயம் சரியான பிறகு உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை. இதனால் கோபமடைந்த பிசிசிஐ இவர்கள் இருவரையும் சம்பள பட்டியலில் இருந்து நீக்கியது. பிசிசிஐயின் உத்தரவை மீறி செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் அணிக்காக விளையாடி வரும் இஷான் கிஷன் இந்த சீசனில் தனது பெயரை பதிவு செய்யவில்லை. அதற்கு பதில் ஐபிஎல் 2024 போட்டிகளுக்காக பயிற்சியில் ஈடுபட்டு கொண்டுள்ளார்.
காலிறுதி போட்டிகளை தவறவிட்ட ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது அரையிறுதியில் மும்பை அணிக்காக விளையாடி உள்ளார். பிசிசிஐயால் நான்கு வீரர்களுக்கு கிரேடு A+ ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு சில போட்டிகளில் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கு கிரேடு ஏ ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு போட்டி கட்டணத்தை தவிர இவரது சம்பளம் ரூ.5 கோடி ஆகும். இந்நிலையில், கிரேடு A+ல் இருக்கும் நான்கு வீரர்கள் ஹர்திக் பாண்டியாவை விட அதிக சம்பளம் வாங்குகின்றனர். அவர்களுக்கு ரூ.7 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. ஹர்திக் பாண்டியாவை விட அதிக சம்பளம் வாங்கும் 4 இந்திய வீரர்கள் யார் யார் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
ரோஹித் ஷர்மா: இந்திய கேப்டன் டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா A+ கேட்டகிரியில் இடம் பெற்றுள்ளார். இவருக்கு போட்டி கட்டணத்தை விட வருடம் ரூ 7 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை வழிநடத்த உள்ளார். ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட உள்ளார். ரோஹித்தின் கேப்டன்சியின் கீழ் இந்தியா 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த இரண்டு இறுதிப் போட்டிகளிலும் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
விராட் கோலி: விராட் கோலி இதற்கு முன்பும் A+ கேட்டகிரியில் இருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடாமல் போனாலும் தனது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார். ஒரு வருடத்திற்கு ரூ.7 கோடி சம்பளம் பெறுகிறார். ஐபிஎல் 2024ல் மீண்டும் விளையாட உள்ளார் விராட் கோலி.
ரவீந்திர ஜடேஜா: நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மூன்று வடிவங்களிலும் இந்திய அணிக்கு முக்கியமான வீரராக இருந்து வருகிறார். மேலும், ஐபிஎல்லில் சென்னை அணிக்காக ரூ.16 கோடி சம்பளம் பெறுகிறார். இது ஹர்திக் பாண்டியாவின் சம்பளத்தை விட அதிகம். ஐபிஎல்லில் பாண்டியா ரூ.15 கோடி சம்பளமாக பெறுகிறார். மேலும் A+ கேட்டகிரியிலும் இடம் பெற்றுள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா: ஜஸ்பிரித் பும்ரா இந்தியாவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் முதல் இடத்தில் உள்ளார். மேலும் கிரேடு A+ பிரிவில் தக்கவைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரூ.7 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. இந்திய அணிக்காக பும்ரா முக்கியமான தொடர்களை மட்டுமே விளையாடுகிறார்.