இந்திய பிளேயிங் லெவன்.. தகுதியான ஒரே வீரர் அவர் தான்.. ஆர்சிபி வீரருக்காக பேசும் டி வில்லியர்ஸ்!
இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ள இளம் வீரர் சர்ஃபராஸ் கான் தான் என்று தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திரா ஜடேஜா இருவரும் காயம் அடைந்தனர். இதையடுத்து இவர்கள் இருவரும் என்சிஏவுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர்களது இடத்தில் விளையாட வாஷிங்டன் சுந்தர், சர்ஃபராஸ் கான் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய உள்ளூர் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் வீரர் என்றால் அது சர்ஃபராஸ் கான் தான். 3 ஆண்டுகளுக்கும் மேலாக ரஞ்சி டிராபி தொடரில் அதிகளவிலான ரன்களை குவித்து வருகிறார். ஆஸ்திரேலியா ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு பின் அதிக பேட்டிங் சராசரியை கொண்டு வீரர் என்ற சாதனையுடன் வலம் வருபவர் சர்ஃபராஸ் கான். 66 இன்னிங்ஸ்களில் விளையாடி 3,912 ரன்களை விளாசியுள்ளார்.
மொத்தமாக 14 சதங்கள், 11 அரைசதங்கள் உட்பட 69.85 பேட்டிங் சராசரியுடன் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதனால் ஒவ்வொரு முறை டெஸ்ட் அணி தேர்வு செய்யப்படும் போதும், சர்ஃபராஸ் கான் இல்லையென்றால் ரசிகர்களிடையே விவாதம் எழும். இதனிடையே கடந்த 2 மாதங்களாக இந்திய ஏ அணிக்காக ஆடி வந்த சர்ஃபராஸ் கான், சதங்கள் மற்றும் அரைசதங்களாக விளாசினார். தென்னாப்பிரிக்கா மண்ணில் அசத்திய அவர், இந்திய மண்ணிலும் வெளுத்து கட்டினார்.
இந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவனில் சர்ஃபராஸ் கான் இருக்க வேண்டும் என்று தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் டி வில்லியர்ஸ் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து டி வில்லியர்ஸ் பேசுகையில், சர்ஃபராஸ் கானின் ஆட்டத்தை காண்பதற்காக ஆவலுடன் உள்ளேன். ஏனென்றால் அபரிவிதமான முதல்தர ரெக்கார்டை வைத்துள்ளார். என்னை பொறுத்தவரை, பிளேயிங் லெவனில் விளையாடுவதற்கான அனைத்து தகுதிகளையும் சர்ஃபராஸ் கான் பெற்றுள்ளார்.