பாகிஸ்தான் வம்சாவளி வீரருக்கு இந்திய விசா சிக்கல்.. முதல் டெஸ்ட்டில் நீக்கம்.. பொங்கிய பென் ஸ்டோக்ஸ்
இங்கிலாந்து டெஸ்ட் அணியில் புதிதாக இடம் பெற்ற 20 வயது ஸ்பின்னர் சோயப் பஷீர்-க்கு இந்திய விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலக்கப்பட்டு இருக்கிறார். அதனால் தன் திட்டம் நிறைவேறாமல் போனதோடு, இளம் வீரருக்கு நேர்ந்த நிலைமையை எண்ணி பொங்கி இருக்கிறார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25 முதல் துவங்க உள்ளது. இந்திய ஆடுகளங்களில் ஸ்பின் பந்துவீச்சு முக்கிய விஷயமாக இருக்கும் என்பதால் சோயப் பஷீர், டாம் ஹார்ட்லி என இரண்டு அறிமுக ஸ்பின்னர்களையும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடி இருக்கும் ரெஹான் அஹ்மத் மற்றும் அனுபவ ஸ்பின்னர் ஜாக் லீச் ஆகியோரை இங்கிலாந்து அணி தேர்வு செய்து இருந்தது.
இதில் சோயப் பஷீர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த அவர் இங்கிலாந்து நாட்டில் பிறந்து வளர்ந்தவர். அவரது உயரம் 6 அடி 4 அங்குலம் என்பதால் அவர் ஸ்பின் பந்துகளை வீசும் போது அது சில சமயம் பவுன்ஸ் ஆகும். பவுன்ஸ் ஆகும் ஸ்பின் பந்துகளை எதிர்கொள்வது என்பது பல பேட்ஸ்மேன்களுக்கு கடினமான விஷயமாக இருக்கும் எனக் கருதி அவரை இங்கிலாந்து அணி தேர்வு செய்தது.
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் பயணத் திட்டத்தில் இருந்த ஒரு குளறுபடி காரணமாக சோயப் பஷீர் விசா சிக்கலில் மாட்டிக் கொண்டார். பாகிஸ்தான் நாட்டினர் மற்றும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த பிற நாட்டினர் இந்தியாவிற்கு வர வேண்டும் என்றால் கடினமான விசா நடைமுறை உள்ளது. குறைந்தது ஏழு நாட்கள் கழித்தே அவர்களுக்கு விசா வழங்கப்படும். அதற்கு காரணம் வேறு. வேண்டுமென்றே இந்தியா அப்படி செய்கிறது என அர்த்தம் இல்லை. குறிப்பிட்ட பாகிஸ்தான் வம்சாவளியினர் விசாவுக்கு விண்ணப்பம் அனுப்பியதில் இருந்து இந்திய அரசு சார்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்படும். அவரின் பின்புலம் குறித்து விரிவாக தெரிந்து கொண்ட பின்னரே விசா வழங்க அனுமதி வழங்கப்படும்.
இந்த நிலையில், இதயு குறித்து தெரியாமல் இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டிக்கு மூன்று நாட்கள் முன்னதாக இந்தியா வர திட்டமிட்டு இருந்தது. அதனால் விசாவுக்கு விண்ணப்பம் செய்வதிலும் அந்த அணி தாமதம் செய்து இருக்கிறது. அதில் தான் சோயப் பஷீர் சிக்கிக் கொண்டார். இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் அவரை பயன்படுத்தலாம் என திட்டமிட்டு இருந்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வெறுத்துப் போயிருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில், “நான் மனமுடைந்து போயிருக்கிறேன். அந்த இளம் வீரருக்கு இது விரக்தியான சூழ்நிலை” எனக் கூறி இருக்கிறார்.