கடலை மிட்டாய் மாதிரி கார் வாங்கும் இந்தியர்கள்.. பிப்ரவரியில் உச்சம்! எந்த கம்பெனிகளில் அதிக சேல்ஸ்?
இந்தியாவில் தனிநபர் வாகன பயன்பாடு அதிகரித்து வருகிறது.சாலைகளில் முன்பை விட அதிக எண்ணிக்கையிலான இரு சக்கர வாகனங்களையும், கார்களையும் நாம் கண் கூட பார்க்கிறோம். இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய வாகன விற்பனையாளர் சங்கம், பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் பயணியர் வாகன விற்பனை அதிகரித்திருப்பதாக அறிவித்துள்ளது.
இந்திய வாகன விற்பனையாளர்கள் சங்கம் மாதந்தோறும் நாடு முழுவதும் நடந்த வாகன விற்பனை விவரங்களை வெளியிடும். அந்த வகையில் பிப்ரவரி மாதத்தில் விற்பனையான பயணியர் வாகனம், இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் தரவுகளை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் மொத்தமாக பிப்ரவரி மாதத்தில் 22.94 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. வாகன விற்பனை துறை பாசிட்டிவாக இருப்பதை இது காட்டுகிறது என இந்திய வாகன விற்பனையாளர் சங்க தலைவர் வினோத் அகர்வால் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரியில் 11% உயர்வு: கடந்த 2023 பிப்ரவரியில் வாகன தயாரிப்பாளர்கள் 3.34 லட்சம் பயணியர் வாகனங்களை முகவர்களுக்கு தயாரித்து வழங்கியிருந்தனர், இதுவே 2024 பிப்ரவரி மாதத்தில் 3.70 லட்சம் வாகனங்களாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11% உயர்வு. எஸ்யூவி வகை வாகனங்களின் தொடர் தேவை காரணமாக பயணியர் வாகனங்கள் அதன் அதிகபட்ச மாதாந்திர விற்பனையை பிப்ரவரியில் பதிவு செய்துள்ளதாக இந்திய வாகன விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களும் முந்தைய ஆண்டு பிப்ரவரி விட வளர்ச்சி கண்டிருக்கின்றன. அதே வேளையில் வர்த்தக வாகனங்கள் விற்பனை சிறிதளவு சரிவை கண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டூவீலர் விற்பனை 34.6% உயர்வு: குறிப்பாக இரு சக்கர வாகன விற்பனை 34.6% உயர்ந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் 15.2 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள இந்திய வாகன விற்பனையாளர் சங்கம், மாருதி சுசுகி நிறுவனம் தான் அதிக கார்களை விற்பனை செய்து நம்பர் ஒன் இடத்தில் இருப்பதாக கூறியுள்ளது.
மாருதி சுசுகி: பிப்ரவரி மாதத்தில் மாருதி சுசுகி கார் 1.60 லட்சம் கார்களை விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 50,000 கார்களை விற்பனை செய்துள்ளது. மகேந்திரா & மகேந்திரா நிறுவனம் 42,000 கார்களையும், கியா மோட்டார்ஸ் 20,200 கார்களையும் பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்துள்ளன.
ஆட்டோமொபைல்: இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை மீண்டெழுந்து வந்து, வளர்ச்சியை காட்டுவதாக கூறும் நிபுணர்கள், பிப்ரவரியில் கார் விற்பனை அதிகரித்திருப்பதை இதற்கு உதாரணமாக கூறுகின்றனர். வரும் காலங்களிலும் வளர்ச்சி அடைந்து வரும் துறையாகவே ஆட்டோமொபைல் துறை நீடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.