இந்தியாவின் 75வது குடியரசு தின கொண்டாட்டம்.. அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்
இந்தியாவின் 75ஆவது குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் அன்று தேசிய கொடி ஏற்றப்படும். குடியரசு தினம் என்றால் என்ன? ஜனவரி 26 ஆம் தேதி இந்த நாள் கொண்டாடப்படுவதற்கான காரணத்தை பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அறிந்துகொள்ள வேண்டும். இந்நிலையில் இந்திய குடிமக்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
குடியரசு தினம் என்றால் என்ன?
இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. முன்னதாக இந்தியாவுக்கான அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. 2 ஆண்டு, 11 மாதம் 18 நாட்களில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 1950 ஜனவரி 26 ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நாளையே ஆண்டுதோறும் இந்திய குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
குடியரசு தினம் எப்படி கொண்டாடப்படும்?
குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி இந்தியாவின் படைபலத்தை உலகுக்கு தெரிவிக்கும் வகையில் ராணுவ அணி வகுப்பு டெல்லி ராஜ்பாத்தில் நடைபெறும். இதற்கு முன்னதாக குடியரசு தலைவர் டெல்லி ராஜ்பாத்தில் கொடியேற்றுவார். முப்படை அணிவகுப்புடன், இந்தியாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வாகனங்களின் அணிவகுப்பும் நடைபெறும்.
இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலாசார வாகன ஊர்திகள் இடம்பெறும். சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த அணிவகுப்பு அமையும். மாநிலங்களில் அந்தந்த மாநில கவர்னர்கள் கொடியேற்றுவார்கள். மாநில அரசுகள் சார்பாக பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மேலும், சிறந்த முறையில் பணியாற்றிவர்களை கவுரவிக்கும் வகையில் விருதுகள் இந்த தினத்தின்போது வழங்கப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விருந்தினர் அழைக்கப்படுவார்கள். இவர்கள் பெரும்பாலும் உலக நாடுகளின் பிரதமர் அல்லது அதிபராக இருப்பார்கள்.