இந்தியாவில் முதல்முறையாக 1,100 ஏக்கரில் அயோத்தியில் வாஸ்து முறைப்படி துணை நகரம்
உ.பி. அயோத்தியில் பிரம்மாண்டராமர் கோயில் 22-ம் தேதி திறக்கப்படுகிறது. இதன்பிறகு நாள்தோறும் 6 லட்சம் பக்தர்கள் வரை அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு அயோத்தியை மறுசீரமைக்க ரூ.30,000 கோடியில் 178 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் அயோத்தியில் ரூ.2,200 கோடி மதிப்பில் 1,100 ஏக்கரில் புதிதாக துணை நகரத்தை அமைக்க உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து உத்தர பிரதேச கூடுதல் செயலாளர் நிதின், அயோத்தி மாநகராட்சி ஆணையர் விஷால் சிங் கூறியதாவது: அயோத்தி ராமர் கோயிலை மக்கள் வழிபாட்டுக்கு திறந்த பிறகு பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு அயோத்தி நகரின் சாலைகள், தெருக்களை அகலப்படுத்தி உள்ளோம்.
அடுத்தகட்டமாக அயோத்தியில் புதிதாக துணை நகரை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அயோத்தியின் சரயு நதிக்கரையில் அமைந்துள்ள கிராமங்களில் இருந்து நிலங்களை கையகப்படுத்த உள்ளோம்.
இதன்படி 1,000 ஏக்கர் பரப்பளவில் புதிய துணை நகரம் நிர்மாணிக்கப்பட உள்ளது. இந்த திட்டம் 2 கட்டங்களாக நிறைவேற்றப்படும். முதல்கட்ட பணி வரும் நவம்பரில் தொடங்கும். இந்தியாவில் முதல்முறையாக வாஸ்து சாஸ்திர அடிப்படையில் அயோத்தி துணை நகரம் கட்டப்பட உள்ளது.
அனைத்து மாநிலங்கள் தரப்பில் புதிய துணை நகரில் விருந்தினர் மாளிகை கட்டப்படும். வெளிநாடுகள் தரப்பிலும் விருந்தினர் மாளிகை கட்டப்படும். தற்போதைய நிலையில் நேபாளம், இலங்கை, தென் கொரியா ஆகிய நாடுகள் அயோத்தி துணை நகரில் விருந்தினர் மாளிகை கட்ட நிலங்களை ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளன.
அயோத்தி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரூ.3,935 கோடியில் 70 கி.மீ. தொலைவுக்கு வெளிவட்டச் சாலை அமைக்கப்பட உள்ளது.
உலகின் உயரமான ராமர் சிலை: அயோத்தியில் பகவான் ராமருக்கு ரூ.2,500 கோடி செலவில் 251 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட வெண்கலச் சிலை அமைக்கப்பட உள்ளது. இது உலகின் மிக உயரமான சிலையாக இருக்கும்.
சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகத்தில் ராமர் சிலை அமைக்கப்படும். இங்கு ராமரின் வாழ்க்கை வரலாறை எடுத்துரைக்கும் நவீன அருங் காட்சியகம் அமைக்கப்படும்.
அயோத்தி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சரயு நதிதூய்மைப்படுத்தப்பட்டு, நதியின்இருபுற கரைகளும் அழகுபடுத்தப்படும். சரயு நதிக்கரை பகுதியில் உலகத் தரத்தில் பொழுதுபோக்கு பூங்கா உருவாக்கப்படும்.
இந்தியாவின் ஆன்மிக தலைநகராக அயோத்தியை மாற்ற திட்டமிட்டு உள்ளோம். மேலும் அயோத்திராமர் கோயிலை சர்வதேச அளவில் கொண்டு செல்ல உத்தர பிரதேச அரசும் மத்திய அரசும் திட்டமிட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.