தகர்ந்தது இந்தியாவின் ஹாக்கி ஒலிம்பிக் கனவு..வாய்ப்பை தட்டிப்பறித்த ஒற்றை கோல்
தேசிய விளையாட்டான ஹாக்கியில் இந்திய மகளிர் அணி ஜப்பானிடம் தோல்வியடைந்ததால் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்பை இழந்திருக்கிறது. 33-ஆவது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் ஜூலை மாதம் தொடங்குகிறது. இதற்கான மகளிர் ஹாக்கி தகுதி சுற்று போட்டி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்றது.
இதில் 3 ஆவது மற்றும் ஒலிம்பிக் வாய்ப்பிற்கான போட்டியில் ஜப்பானை இந்தியா எதிர்கொண்டது. பரபரப்பாக தொடங்கிய இந்தப் போட்டியில், 6ஆவது நிமிடத்தில் ஜப்பான் அணிக்கு 2 ஆவது பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதனை ஜப்பான் வீராங்கனை கனா உராதா கோலாக்கினார். இதனை தொடர்ந்து, பிரமாதமான தடுப்பு ஆட்டத்தின் மூலம், முன்னிலையை தக்க வைத்த ஜப்பான், கடைசி வரை இந்திய அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பை வழங்கவில்லை.
இதனால், ஆட்டத்தின் முடிவில் 0-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் தகுதி சுற்றில் 4 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டு, ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்தியா இழந்தது. இந்திய ஹாக்கி மகளிர் அணியினர் ஒலிம்பிக் போட்டிகளில் பெரிதாக சாதிப்பார்கள் என்று கனவுகளுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த தோல்வி ஏமாற்றமளித்திருக்கிறது.
கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்ட ஒரு தேசம், சொந்த நாட்டின் தேசிய விளையாட்டில் தோல்வி அடைந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிரிக்கெட்டுக்கு ஒதுக்கும் அளவு நிதி ஹாக்கிக்கும் ஒதுக்கினால் தேசிய விளையாட்டு மேம்படும் என்பது விளையாட்டு ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவத்தை ஹாக்கி போட்டிகளுக்கும் அளித்தால் நிச்சயம் வீரர்களும் , வீராங்கனைகளும் சாதிப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.