அஜீரணக் கோளாறு, வயிறு வலி… கல்லீரல் புற்றுநோய் அறிகுறிகள் இதுதான் – தெளிவான விளக்கம்

நம் உடலில் உள்ள கல்லீரல், வயிற்றின் வலது மேற்புறத்தில் ஒரு கால்பந்தின் அளவிற்கு இருக்கும் முக்கியமான உறுப்பாகும். கல்லீரலில் உள்ள செல்களில் தான் புற்றுநோய் ஆரம்பமாகிறது. மற்ற நோய்களைப் போலவே கல்லீரல் புற்றுநோயையும் ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டு சிகிச்சை எடுத்தால் எளிதில் குணப்படுத்தலாம். ஆனால் இதில் என்ன பிரச்சனை என்றால், கல்லீரல் புற்றுநோய் நம் உடலில் முற்றிய பிறகே அறிகுறிகள் தென்படத் தொடங்கும். ஆகையால் தான் இது மிகவும் ஆபத்தான நோயாக இருக்கிறது. கல்லீரல் புற்றுநோயின் அறிகுறிகள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து இந்தக் கட்டுரையை படியுங்கள்.

சில அறிகுறிகளை அஜீரணக் கோளாறு என தவறாக நினைத்துக் கொள்வோம்.

சாப்பிட்ட பிறகு நமக்கு ஏற்படும் அசௌகர்யத்தையே அஜீரணம் என நாம் அழைக்கிறோம். பொதுவாகக் காணப்படும் இந்த இரண்டு அறிகுறிகளையும் நாம் அஜீரணக் கோளாறு என தவறாக நினைத்துக் கொள்வோம். அது என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

கொஞ்சமாக சாப்பிட்டாலும் வயிறு நிரம்பியது போன்ற உணர்வு ஏற்படும்.

குமட்டல் அல்லது வாந்தி

இந்த அறிகுறிகள் வந்தால் புற்றுநோய் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது:

மேலே நாம் கூறிய அறிகுறிகள் யாவும் வேறு சில உடல்நல பிரச்சனைகள் காரணமாகவும் நமக்கு ஏற்படலாம். ஆகையால் இந்த அறிகுறைகளை பார்த்து, நமக்கு புற்றுநோய் வந்துவிட்டது என பயப்படாதீர்கள். அடிக்கடி உங்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் வந்தால், உடனடியாக மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

வேறு சில பொதுவான அறிகுறிகள்:

ஒருவருக்கு கல்லீரல் புற்றுநோய் வந்தால், வேறு சில தீவிரமான அறிகுறிகளும் தென்படும். அவை என்னவென்று பார்ப்போம்.

எந்த காரணமில்லாமல் திடீரென்று உடல் எடை குறைதல்

பசியின்மை

கல்லீரல் பெரிதாவதன் காரணமாக, வலப்புற விலா எலும்பின் கீழ் ஏதோ தட்டுப்படுவது போன்ற உணர்வு ஏற்படும்.

மண்ணீரல் பெரிதாவதன் காரணமாக, இடப்புற விலா எலும்பின் கீழ் ஏதோ தட்டுப்படுவது போன்ற உணர்வு ஏற்படும்.

வலப்புற தோள்பட்டையில் வலியை உணர்தல்

அடிவயிற்றில் வீக்கம் ஏற்படுதல் அல்லது நீர் கோர்ப்பது

மஞ்சள் காமாலை

அரிப்பு

அஜீரணக் கோளாறு என்பதற்கான தெளிவான அறிகுறிகள்:

அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதாலோ, அல்லது பானங்கள் பருகுவதாலோ, பிடிக்காத உணவுகளை சாப்பிட்டாலோ, வெறும் வயிற்றில் மாத்திரைகள் சாப்பிட்டாலோ அஜீரணக் கோளாறு ஏற்படும். வேறு சில அறிகுறிகளும் இருக்கின்றன. அவை,

நெஞ்செரிச்சல் – சாப்பிட்ட பின்பு மார்பு பகுதியில் வலி நிறைந்த எரிச்சல் உண்டாகும்.

ஏப்பம் மற்றும் வாய்வு வெளியேறுதல்

கல்லீரல் புற்றுநோய் உங்கள் உடலில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

உங்கள் உடலில் கல்லீரல் புற்றுநோய் வளர்ந்து வந்தால், ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரிக்கும். இது ஹைபர்கால்சிமியா நோயை உருவாக்கும். இதன் காரணமாக உங்களுக்கு அடிக்கடி குமட்டல், குழப்பம், மலச்சிக்கல், உடல் பலவீனம், தசைப்பிடிப்பு போன்ற பிரச்சனைகள் வரும். மேலும் கல்லீரல் புற்றுநோயினால் உங்கள் உடலில் சர்க்கரை அளவு குறைந்து, சோர்வு அல்லது மயக்கம் ஏற்படும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *