“இந்திய – ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தக ஒப்பந்தம் மூலம் இரு தரப்புக்கும் பயன்” – பியூஷ் கோயல்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அரசு முக்கிய முன்முயற்சிகளை எவ்வாறு உன்னிப்பாகத் திட்டமிடுகிறது என்பதற்கு இந்திய – ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம், ஒரு சிறந்த உதாரணம்.

கடந்த வருடம் அமலுக்கு வந்த இது அனைத்து பங்குதாரர்களுடனும் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்ட பிறகு சாமானிய மக்கள் மற்றும் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன் பெறுவதற்காக கொண்டுவரப்படுகின்றன.

கிரிக்கெட்டை நேசிக்கும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இந்திய – ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம், இரு தரப்பினருக்கும் பரஸ்பர பயனளிக்கக் கூடியதாகும். நமது அமிர்த காலத்தில் புதிய இந்தியாவின் நம்பிக்கை மற்றும் லட்சியங்களின் உலகளாவிய பார்வையை இது பிரதிபலிக்கிறது.

சட்ட விதிகளுக்கு ஆதரவளிக்கும் ஒத்த சட்ட அமைப்பு முறைகளைக் கொண்டுள்ள இரண்டு நாடாளுமன்ற ஜனநாயகங்களுக்கு இடையிலான உத்தி சார்ந்த கூட்டு முயற்சியை இது மீண்டும் வலியுறுத்துகிறது. ஜப்பான் மற்றும் அமெரிக்காவுடன் இரு நாடுகளும் குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. ஜப்பானுடன் முத்தரப்பு விநியோகச் சங்கிலி நெகிழ்தன்மை முன்முயற்சியிலும், 14 உறுப்பினர்கள் கொண்ட இந்தோ பசிபிக் பொருளாதாரத் திட்டத்திலும் இரு நாடுகளும் சேர்ந்துள்ளன.

சுமார் பத்து ஆண்டுகளில் வளர்ந்த நாடுகளுடன் இந்தியா இணைந்துள்ள முதலாவது தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு அபரிமிதமான திறன் உள்ளது. பெரும்பாலும் கச்சா பொருட்கள் மற்றும் இடைநிலை தயாரிப்புகளை ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்வதோடு, முழுவதும் தயாரிக்கப்பட்ட பொருட்களை பெருமளவில் ஏற்றுமதி செய்கிறது. இதன் காரணமாக இந்திய தொழில்முனைவோரின் உள்ளீட்டு செலவை தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறைப்பதோடு, அவர்களது பொருட்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளில் போட்டியிட வழிவகை செய்யப்படுகிறது.இதன்மூலம் இந்திய புத்தொழில் நிறுவனங்களுக்கும் சிறந்த வாய்ப்புகள் உருவாகின்றன.

ஏற்றுமதியில் வலுவான வளர்ச்சி: இந்திய- ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம், சிறப்பான துவக்கத்தை அளித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. தொழிலாளர்களை மையமாகக் கொண்ட துறைகளில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக இந்த ஒப்பந்தம் உதவிகரமாக இருக்கும் என்ற மோடி அரசின் நம்பிக்கையை இது வலுப்படுத்துகிறது.

2023-24 ஆம் ஆண்டின் ஏப்ரல் – நவம்பர் காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கான இந்திய பொருட்களின் ஏற்றுமதி 14% அதிகரித்திருப்பது, சவாலான உலகளாவிய சூழலில் உலகின் பிற நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகத்தை விட மிகச்சிறந்த செயல்பாடாகும். முக்கிய வளர்ந்த பொருளாதாரங்களில், தேவை குறைந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த இறக்குமதி 4% குறைந்த போதும், இந்தியாவிலிருந்து அதன் கொள்முதல்கள், சீராக வலுப்பெற்றுள்ளன.

ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதிகள் 19 சதவிகிதம் சரிந்திருப்பது, வர்த்தக பற்றாக்குறையை 39% குறைத்துள்ளது. முன்னுரிமை அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கான ஏற்றுமதிகள், வேலைவாய்ப்பு உருவாக்கும் துறைகளில் வளர்ச்சியை பதிவு செய்தன. ஆஸ்திரேலியாவுக்கான பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி 2023-24 ஏப்ரல்-அக்டோபரில் 24 சதவிகிதம் அதிகரித்தது, இது ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 1 சதவிகித உயர்வாகும். ஆயத்த ஆடைகள் துறையில் ஆஸ்திரேலியாவுக்கான ஏற்றுமதி 27 சதவிகிம் அதிகரித்தது. ஆனால், ஒட்டுமொத்த ஏற்றுமதி சரிவை சந்தித்தது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *