பிரித்தானிய மன்னரின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய மன்னர் சார்லஸ் புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டுள்ளமையினால் அதனை குணப்படுத்த முடியும் என வைத்தியர்கள் நம்பிக்கை தெரிவித்ததாக பிரித்தானிய உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டு வாரங்களுக்கு முன்பு புரோஸ்டேட் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்திருந்தது.
புற்று நோய் தொடர்பில் மேலதிக விபரங்கள் எதுவும் வெளியாகாத போதிலும், அது புரோஸ்டேட் புற்றுநோய் அல்ல எனவும் தெரிவிக்கப்படுகிறது.
புரோஸ்டேட் புற்றுநோய் என்பது ஆண்களை பாதிக்கும் ஒரு பரவலான புற்று நோயாகும். ஆண்களுக்கு இருக்கும் புரோஸ்டேட் சுரப்பியில் இந்த வகை புற்றுநோய் ஏற்படுவதால் அதை புரோஸ்டேட் புற்றுநோய் என அழைக்கிறார்கள்.
பிரித்தானிய பிரதமரின் சந்திப்பு
75 வயதான மன்னர் சார்லஸ் தற்போது சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகவும், அவரது பணி பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசர் சார்லஸ் தற்போது மருத்துவ ஆலோசனையின் பேரில் பொதுப் பணிகளில் இருந்து விலகி இருந்தாலும், வாரந்தோறும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை சந்திப்பார் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை இளவரசர் வில்லியம் மன்னரின் பெரும்பாலான உத்தியோகபூர்வ பணிகளில் கலந்துகொள்வார் என்றும், அமெரிக்காவில் இருக்கும் இளவரசர் ஹாரி, தனது தந்தையின் உடல்நிலையைப் பார்க்க அடுத்த வாரம் பிரித்தானிய வரவிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.