மன்னர் சார்லஸ் புற்றுநோய் சிகிச்சைக்காக எடுத்துக்கொள்ளவிருக்கும் சிகிச்சை குறித்து வெளியாகிவரும் தகவல்கள்

மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் என்ன சிகிச்சை எடுத்துக்கொள்வார் என்பது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகிவருகின்றன.
அதற்குக் காரணமும் உண்டு…
புற்றுநோய் என்பது என்ன?
புற்றுநோய் என்பதற்கு பல வரையறைகள் இருந்தாலும், பொதுவாகக் கூறினால், உடலிலுள்ள சில செல்கள் கட்டுப்பாடே இல்லாமல் பெருகிக்கொண்டே போய், உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு பரவும் ஒரு செயல்பாடே புற்றுநோய் எனலாம்.
எளிமையாக புரியும்படி கூறினால், கீழே விழுந்து ஒருவருக்கு அடிபட்டுவிட்டது என்று வைத்துக்கொள்வோம். அவரது கையில் காயம் ஏற்பட்டு தோல் பிய்த்துக்கொண்டு போய்விட்டது. அவர் அதற்கு மருந்து போடுகிறார். மருந்து வேலை செய்யும் அதே நேரத்தில், அவரது உடலும் இழந்த அந்த தோலை சரி செய்ய புதிய செல்களை உருவாக்குகிறது. புதிய தோல், தோல் பிய்ந்துபோன இடத்தை நிரப்பி சரிசெய்கிறது. இது சாதாரணமாக நடக்கும் ஒரு விடயம்.
அதுவே, காயம் குணமடைந்தும்கூட, செல்கள் புதிதாக உருவாவது நிற்கவில்லை என்று வைத்துக்கொள்வோம், என்ன நடக்கும், அது ஒரு கட்டி போல மாறிவிடும் இல்லையா, இதுதான் புற்றுநோயின் அடிப்படை.
ஆனால், இதுமட்டுமே புற்றுநோய் அல்ல. புற்றுநோயில் இதுபோல் கட்டிகள் போல உருவாகும் புற்றுநோயும் உண்டு, இரத்தப் புற்றுநோய் என்றொரு புற்றுநோயும் உண்டு.
எதனால் புற்றுநோய் உருவாகுகிறது?
புற்றுநோய் உருவாக, உடலுக்கு வெளியே பல காரணங்கள் இருந்தாலும், உடலுக்குள் புற்றுநோய் உருவாகக் காரணமாக அமைவது, திடீர் மாற்றங்கள். அதாவது, இன்றைய காலகட்டத்தில், செல்களுக்குள் DNA என்றொரு விடயம் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
இந்த DNAவில் ஏராளம் ஜீன்கள் இருக்கும். அந்த ஜீன்கள், செல் என்னென்ன வேலை செய்யவேண்டும், எப்படி வளரவேண்டும், எப்படி பிரியவேண்டும் என்னும் கட்டளைகளப் பிறப்பிக்கும். சில நேரங்களில், அந்த கட்டளைகளில் தவறு நேர்ந்துவிட, அந்த செல் வழக்கமாக இயங்குவதை விட்டு விட்டு புற்றுநோய் செல்லாக மாறிவிடக்கூடும். இது ஒரு குறைந்தபட்ச விளக்கம் மட்டுமே. அறிவியல் எவ்வளவு வளர்ந்தும், இன்னமும் மருத்துவ உலகில் கண்டுபிடிக்கப்படாத விடயங்கள் ஏராளம் உள்ளன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
புற்றுநோய் சிகிச்சை
பொதுவாக புற்றுநோய்க்கு கீமோதெரபி என்னும் சிக்கியளிக்கப்படும். இந்த கீமோதெரபி என்பது, புற்றுநோய் செல்களை ரசாயன உதவி கொண்டு அழிப்பதாகும்.
ஆனால், இந்த கீமோதெரபிக்கு பல்வேறு பக்க விளைவுகள் உண்டு. முடி கொட்டுதல், களைப்பு, பசியின்மை, சோர்வு, எப்போதும் நோய்வாய்ப்பட்டது போல் உணர்தல், வாய் உலர்ந்துபோதல் என பல பக்கவிளைவுகள் உள்ளன.
மன்னர் சார்லஸ் புற்றுநோய் சிகிச்சைக்காக எடுத்துக்கொள்ளவிருக்கும் சிகிச்சை
விடயத்துக்கு வருவோம். தற்போது, பிரித்தானிய மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் என்ன சிகிச்சை எடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதற்குக் காரணம், மன்னர், அக்யு பங்க்சர், ஆயுர்வேதம், ஓமியோபதி போன்ற complementary medicine மற்றும் alternative therapy என்னும் மருத்துவமுறைகளை ஆதரிப்பவர் ஆவார். அத்துடன், மன்னருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ குழுவின் தலைவராக இருக்கும் Dr மைக்கேல் டிக்ஸன் (Dr Michael Dixon) என்பவரும் இத்தகைய சிகிச்சை முறைகளை ஆதரிப்பவர்.
ஆக, மன்னருக்கும் கீமோதெரபி சிகிச்சை மீது நம்பிக்கை இல்லை என்று கூறும் ராஜ குடும்ப நிபுணரான Tom Bower, ஆனால், கீமோதெரபியை தவிர்ப்பது ஆபத்தானது என்கிறார்.
விடயம் என்னவென்றால், மன்னருக்கு என்ன புற்றுநோய் என்பதையே பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் தெரிவிக்கவில்லை. அப்படியிருக்கும்போது, அவர் என்ன சிகிச்சை எடுத்துக்கொள்கிறார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகுமா என்றால், அது சந்தேகம்தான்!