இன்போசிஸ் பங்குகள் 3% சரிவு.. நினைத்தபடியே நடக்குதே, அப்போ அடுத்தது இதுதானா..?!!
இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி இந்திய இளைஞர்களை வாரத்திற்கு 70 மணிநேரம் பணியாற்றக் கூறியதும், இலவசங்கள் வேண்டாம் எனக் கூறியது, AI பெரிய பிரச்சனை எனப் பல கருத்துக்களை வெளியிட்டு இந்த வருடம் பெரும்பாலான காலத்தில் இன்போசிஸ் பெயர் டிரெண்டி ஆகவே இருந்தது.
ஆனால் நாராயணமூர்த்தி, இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து உயர் அதிகாரிகள் வெளியேறியது, இதன் மூலம் உயர்மட்ட நிர்வாகத்தில் ஏற்பட்டு உள்ள தடுமாற்றம், சமீபத்தில் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை இழந்தது, அதை அனைத்திற்கும் பொறுப்பான சிஇஓ சலில் பாரிக் குறித்து இதுவரையில் பேசவில்லை. ஆனாலும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ரியாக்ட் செய்துள்ளனர்.
இன்போசிஸ் சுமார் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான செயற்கை நுண்ணறிவு துறை சார்ந்த டெக் சேவை ஒப்பந்தத்தைச் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பாக ஒரு பெயர் வெளியிடாத நிறுவனத்துடன் செய்திருந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை இன்போசிஸ் மும்பை பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் இன்போசிஸ் உடன் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் சர்வதேச நிறுவனம் ரத்து செய்ய முடிவு செய்துள்ளது, இதனால் இரு தரப்பும் மாஸ்டர் ஒப்பந்தத்தைத் தொடரப்போவது இல்லை எனச் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியாக 3 நாட்களுக்குப் பின்பு துவங்கிய மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் இன்போசிஸ் பங்குகள் இன்று காலை வர்த்தகத்தில் மட்டுமே சுமார் 3 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இந்த 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் 15 வருடத்திற்கானது, இது வெற்றி அடைந்திருந்தால் வருடம் 100 மில்லியன் டாலர் அளவிலான வருமானம் அடுத்த 15 வருடத்திற்கு இதன் வாயிலாகக் கிடைத்திருக்கும்.
இது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனச் சனிக்கிழமையே தமிழ் குட்ரிட்டன்ஸ் கணித்திருந்த நிலையில், இன்று காலை வர்த்தகத்தில் வர்த்தகம் துவங்கும் போது இன்போசிஸ் பங்குகள் அதன் முந்தைய விலையான 1562.90 ரூபாயில் இருந்து 1535 ரூபாயாகக் குறைந்து 2.6 சதவீத சரிவை பதிவு செய்துள்ளது.