தீவிரமடையும் பஸ் ஸ்டிரைக்… தற்காலிக ஓட்டுனர், நடத்துனர் நியமனம்! போக்குவரத்து துறை அதிரடி!
நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில், பயணிகளை இறக்கியதும், பேருந்துகள் பணிமனைகளுக்கு செல்ல துவங்கின.
இன்னும் சில இடங்களில் நேற்று மாலை முதலே போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட துவங்கினார்கள். பண்டிகை விடுமுறை காலங்கள் நெருங்கி வரும் நிலையில், இந்த போராட்டம் பொதுமக்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதே நேரத்தில் வேலை நிறுத்தத்தினால் பாதிப்பு இல்லை என்றும், சிறப்பு பேருந்துகளை அறிவித்திருக்கிறார் அமைச்சர். பேருந்துக்ள் தற்காலிக ஓட்டுநர், நடத்துநர் மூலமாக வழக்கம் போல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தற்காலிக ஓட்டுனர் நடத்துனரை நியமனம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. போக்குவரத்து ஊழியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் உட்பட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டாதநிலையில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பண்டிகை விடுமுறை நாட்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் என்று காலை மற்றும் மாலை வேளைகளில் இருக்கும் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும் போதே பேருந்து பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். பேருந்துகள் பிதுங்கியபடி கூட்டத்தில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. அல்லது பெண்களும், மாணவிகளும் பேருந்து நிலையத்தில் அப்பாவிகளாய் நின்று கொண்டிருக்கும் போது, கூட்டத்தைத் தவிர்க்க பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல், கொஞ்சம் தள்ளி போய் நிற்கும் பேருந்துகள் என்கிற அவலக் காட்சிகள் மாநகரங்களில் சர்வ சாதாரணம். இப்போது நிலைமை இன்னும் மோசமாகி இருக்கிறது.
போக்குவரத்து தொழிற்சங்கங்களான அண்ணா தொழிற்சங்க பேரவை தலைமையிலான தொழிற்சங்கங்கள் மற்றும் ஏஐடியுசி, சிஐடியு தலைமையிலான போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று இரவு 12:00 மணி முதல் தமிழகம் முழுவதும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்காலிக ஓட்டுனர் நடத்துனர்களைப் பயன்படுத்துவது குறித்து சிஐடியூ சங்கத்தினர் கூறுகையில், “2 ஆண்டுகளாக போக்குவரத்து துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பாத அரசு, போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் அறிவித்ததும், 2 நாட்களில் தற்காலிக ஓட்டுநர்களை நியமித்து, பேருந்துகளை இயக்கப் போவதாக சொல்கிறது. தற்காலிக ஓட்டுநர்களை நியமிப்பதால் மக்களின் பிரச்சனை தீரப்போவது இல்லை. மாறாக அது பிரச்சனையை தீவிரப்படுத்தும். ரோட்டில் ஒட்ட வேண்டிய பேருந்துகளை சென்ட்ரல் ஸ்டேஷனுக்குள் ஓட்டுவார்கள்” எனக் கூறியுள்ளார்.