இன்டர்நெட் 5Gக்கு இனி ரீசார்ஜ் விலை கூடலாம்.. ஏர்டெல் மற்றும் ஜியோவின் எதிர்கால பிளான் என்ன?
இந்தியாவில் கடந்த 2022-ஆண்டு அக்டோபர் முதல் 5G சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 5G சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தியாவில் 5G புரட்சியில் முன்னணியில் உள்ளன. நாட்டில் இருக்கும் மற்ற இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடபோன்-ஐடியா மற்றும் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் ஆகியவை இன்னும் 5ஜி சேவைகளை நாட்டில் அறிமுகப்படுத்தவில்லை. 5ஜி சேவைகளை வழங்கி வரும் 2 நிறுவனங்களும் தற்போதுள்ள 4G சேவை கட்டணத்திலேயே 5G கனெக்ஷனை வழங்குகின்றன மற்றும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட ரீசார்ஜ் பிளான்ஸ்களுடன் அன்லிமிட்டட் 5G டேட்டாவை வழங்குகின்றன.
இந்த நிலையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தங்கள் அன்லிமிட்டட் 5G டேட்டா ஆஃபரை விரைவில் நிறுத்தலாம் என்றும், தற்போது இருக்கும் 4G திட்டங்களுக்கான கட்டணங்களை விட 5G பிளான்ஸ்களுக்கான கட்டணங்களை அதிகரிக்க கூடும் என்றும் நிபுணர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் 4G கட்டணங்களுடன் ஒப்பிடும்போது 5G சர்விஸ்களுக்கு குறைந்தபட்சம் 5-10 சதவீதம் அதிகமாக கட்டணம் நிர்ணயிக்கப்படும் எனவும், இது 2024-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அமலுக்கு வர கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அன்லிமிட்டட் டேட்டா பிளான்ஸ்களுடன் 4G சர்விஸ்களுக்கு வசூலிக்கும் கட்டணங்களிலேயே 5G கனெக்ஷனை வழங்கி வருவதன் மூலம், தற்போதுள்ள யூஸர்களை அடுத்த தலைமுறை வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவைக்கு (5ஜி-க்கு) மேம்படுத்த கிட்டத்தட்ட ஒரு வருடமாக ஊக்குவித்து வருகின்றன. இந்த நிலை விரைவில் மாறும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை நிறுவனங்கள் தங்களின் வருவாய் வளர்ச்சியை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், 2024-ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் 5G யூஸர்களின் எண்ணிக்கை 200 மில்லியனை தாண்டும் என்று கூறப்படுகிறது. ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் 5G உள்கட்டமைப்பு முதலீடுகளின் ROI-யை மேம்படுத்த, வரும் 2024 செப்டம்பர் காலாண்டில் தங்கள் மொபைல் கட்டணங்களை குறைந்தபட்சம் 20% வரை அதிகரிக்க கூடும் என தொழில் வல்லுநர்கள் கணித்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. ஏர்டெல் மற்றும் ஜியோ அறிமுகப்படுத்தும் 5G திட்டங்கள் 4G திட்டங்களை விட 5-10 சதவீதம் அதிக விலை கொண்டதாக இருக்கும். எனினும் 5G பயன்பாட்டை யூசர்களிடையே ஊக்குவிக்க அந்த பேக்கேஜ்களில் 30-40 சதவீதம் கூடுதல் டேட்டாவை நிறுவனங்கள் சேர்க்க கூடும் என தெரிகிறது.