அதிரடியில் மிரட்டுறாரே.. ஐபிஎல் தொடரில் சர்பராஸ் கான் விளையாடுவாரா? எந்த அணிக்காக ஒப்பந்தம்?
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமாகிய சர்பராஸ் கான், ஐபிஎல் தொடரில் எந்த அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று பலரும் தேடி வருகின்றனர்.
2014ஆம் ஆண்டு யு19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடி கவனம் ஈர்த்தவர் சர்பராஸ் கான். ஜடேஜாவுக்கு பின் யு19 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய வீரர் என்ற பெருமை சர்பராஸ் கானுக்கு உள்ளது. அதுமட்டுமல்லாமல் யு19 உலகக்கோப்பை தொடரில் கவனம் ஈர்த்த சர்பராஸ் கான், ஆர்சிபி அணிக்காக ரூ.50 லட்சம் கொடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
சிறு வயதிலேயே சர்பராஸ் கான் திறமையான வீரராக இருந்ததால் விராட் கோலி கேப்டன்சிக்கு கீழ் வாய்ப்பு கிடைத்தது. ஒரு இன்னிங்ஸில் கடைசி 2 ஓவர்களில் சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடி அசத்த, விராட் கோலி அவருக்கு வணக்கம் கூறி ஓய்வறைக்கு வரவேற்றார். அதன்பின் ஆர்சிபி அணியால் தக்கவைக்கப்பட்ட அவர், ஃபிட்னஸில் கவனம் செலுத்தவில்லை.
ஃபிட்னஸில் கவனம் செலுத்தாததால், அடுத்த சீசனிலேயே சர்பராஸ் கான் விடுவிக்கப்படடர். அதன்பின் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், ஐபிஎல் தொடரில் மட்டும் அவரால் சாதிக்க முடியவில்லை. அதன்பின் ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக சில சீசன்களில் விளையாடினார்.
இரு சீசன்களுக்கு முன்பாக சர்பராஸ் கானுக்கு டெல்லி அணியில் அதிகப்படியான வாய்ப்புகள் வழங்கப்படும் அவர் பயன்படுத்தி கொள்ளவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் சர்பராஸ் கான். இந்த போட்டியில் களமிறங்கிய முதல் இன்னிங்ஸிலேயே அதிரடியாக 48 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
அதேபோல் 2வது இன்னிங்ஸில் 65 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இந்த இரு இன்னிங்ஸ்களில் சர்பராஸ் கான் ஸ்பின்னர்களை அநாயசமாக வெளுத்து கட்டியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் கொல்கத்தா, சென்னை, ராஜ்கோட், மும்பை மைதானங்களில் சர்பராஸ் கான் எந்த ஸ்பின்னர்களையும் எளிதாக அடிக்க முடியும் என்று தெரிந்தது.
இதனால் ஐபிஎல் தொடரில் சர்பராஸ் கான் எந்த அணிக்காக விளையாடுவார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் சர்பராஸ் கான் எந்த அணிக்காகவும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும் இந்திய பேட்ஸ்மேன்கள் யாராவது காயம் காரணமாக விலகினால், அவர்களின் முதல் சாய்ஸ் சர்பராஸ் கானாக இருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.