ரூ.1 லட்சத்துக்கும் குறைந்த விலை ஹீரோ வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக விபரம்
ஹீரோ மோட்டோகார்ப் கீழ் செயல்படுகின்ற வீடா புதிதாக இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பட்ஜெட் விலையில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த மாடல் குறைந்த விலையில் கிடைக்கின்ற போட்டியாளர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்திருக்கலாம்.
நாம் முன்பே ஹீரோ வோர்ல்டு 2024 தொடர்பாக பல்வேறு பிரத்தியேக தகவல்களை வெளியிட்டிருந்த நிலையில் வீடா பேட்டரி ஸ்கூட்டர் தொடர்பில் இரண்டு மாடல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கு ஹீரோ மோட்டோகார்ப் பகிர்ந்த தகவலின் மூலம் இரண்டு பேட்டரி ஸ்கூட்டரும் ரூ. 80,000 முதல் ரூ.1.30 லட்சத்துக்குள் அமையலாம்.
சந்தையில் கிடைக்கின்ற ஹீரோ வீடா வி1 புரோ ஸ்கூட்டரின் உண்மையான பயணிக்கும் வரம்பு 110 கிமீ மற்றும் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிமீ ஆக உள்ள நிலையில் இதன் விலை ரூ.1,45,900 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. இந்த மாடலுக்கு கடந்த சில மாதங்களாகவே சலுகை வழங்கப்பட்டு வரும் நிலையில் பிப்ரவரி மாதத்திற்கு ரூ.36,900 வரை கிடைக்கின்றது.
வரவுள்ள இரண்டு புதிய வீடா ஸ்கூட்டர்கள்;
H1 FY25 அதாவது ஏப்ரல் 2024-ஜூன் 2024க்குள் இரண்டு புதிய மாடல்களை வீடா வெளியிட உள்ளது. இந்த இரண்டு மாடல்களும் மிக குறைந்த விலை அதாவது ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக மாஸ் மார்க்கெட் மற்றும் மெயின்ஸ்டீரிம் மார்க்கெட் ரூ.1.20 லட்சம் என இரண்டிலும் வரவுள்ளதாகவும், தற்பொழுது விற்பனையில் உள்ள V1 புரோ மாடல் பீரிமியம் சந்தையில் உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக, 2024-2025 ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் மற்றொரு பிரீமியம் ஸ்கூட்டர் அல்லது மேம்பட்ட வி1 புரோ வரக்கூடும்.
3.94 kWh பேட்டரி பேக்கை பெற்ற விடா வி1 புரோ மாடலை விட குறைந்த பேட்டரி திறன் பெற்று வரவுள்ள மாடல் 3 kWh பேட்டரி பெற்றதாகவும் சிங்கிள் சார்ஜில் 80 கிமீ முதல் 100 கிமீ வரை வெளிப்படுத்துகின்ற மாடல் ஒன்றும், இதனை விட குறைவான பேட்டரி திறன் பெற்ற மாடலும் வரக்கூடும். மேலும் முன்பாக நீக்கப்பட்ட வி1 பிளஸ் வேரியண்டில் 3.44kwh பேட்டரி பெற்றிருந்தது.
புதிய இரண்டு மாடல்களின் எந்த நுட்பவிபரங்களையும் வீடா தற்பொழுது உறுதிப்படுத்தவில்லை. இந்நிறுவனம் நாடு முழுவதும் மிக விரைவாக வீடா மற்றும் ஹீரோ பிரீமியா டீலர்களின் எண்ணிக்கையை விரிவுப்படுத்தி வருகின்றது.