ரூ.1000 முதலீடு… ரூ.4.50 லட்சம் வரை வட்டி… இந்த அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டம் பற்றி தெரியுமா?
சேமிப்பைப் பெருக்கும் நோக்கில் ஒன்றிய அரசு பல திட்டங்களை அறிவித்து வருகிறது. அதில் பெரும்பாலான திட்டங்கள் அஞ்சல் அலுவலகம் வழியாக பயனாளிகளுக்கு கிடைக்கிறது. ஆபத்து குறைவான சேமிப்புத் திட்டங்களை அஞ்சல் அலுவலகம் மக்களுக்கு வழங்குவதால், இவற்றின் மீது பயனாளிகளுக்கு நம்பகத்தன்மை அதிகம் உண்டு.
சந்தை ஏற்ற இறக்கங்களுக்குப் பயந்து சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பாத பல முதலீட்டாளர்களும், தங்களுடைய பணம் பாதுகாப்பாகவும், நிலையான வருமான ஆதாரமாகவும் அஞ்சல் அலுவலகத் திட்டங்களைக் காண்கிறார்கள். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது இந்திய அஞ்சல் அலுவலகம் வழங்கும் ஒரு சிறந்த நிலையான வைப்பு நிதி சேமிப்புத் திட்டம் ஆகும். தற்போது இதை குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
நேஷனல் சேவிங்ஸ் டைம் டெபாசிட் கணக்கு என்றால் என்ன?
1. இது அஞ்சல் அலுவலகத்தால் நடத்தப்படும் ஒரு நிலையான வைப்பு நிதித் திட்டமாகும், இதில் தனிநபர் ஒருவர் 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகள் எனும் நிலையான காலத்திற்கு முதலீடு செய்யலாம்.
2. குறைந்தபட்ச முதலீடு ரூ.1000 ஆகும். இதில் இருந்து ரூ.100 எனும் அதிக எண்ணிக்கையில் பணத்தை முதலீடு செய்யலாம். அதாவது ரூ.1000 அல்லது ரூ.1100 அல்லது ரூ.1800 என்று ரூ.100 அடிப்படையில் எந்த தொகையில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
3. இந்த முதலீட்டுக்கு அதிகபட்ச வரம்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
4. 18 வயதுக்கு மேற்பட்டவர் ஒரு தனிநபர் கணக்கு அல்லது மூன்று பேரை இணைத்து கூட்டுக் கணக்கைத் திறக்கலாம்.
5. 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தையின் சார்பாக ஒரு பாதுகாவலர் கணக்கைத் திறக்கலாம்.
வட்டி விகிதங்கள் எவ்வளவு?
1. ஒருவர் 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம்.
2. பிப்ரவரி 5, 2024 நிலவரப்படி, வட்டி விகிதங்கள் 6.9 விழுக்காடு, 7.0 விழுக்காடு, 7.1 விழுக்காடு மற்றும் 7.5 விழுக்காடாக உள்ளன.
3. இந்த வட்டி விகிதம் மார்ச் 31, 2024 வரை அமலில் இருக்கும்.
4. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் வட்டி திருத்தப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
5. முதலீடு செய்யப்பட்ட தொகைக்கான வட்டி காலாண்டு அடிப்படையில் கணக்கிடப்பட்டு ஆண்டுதோறும் பயனர் கணக்கில் செலுத்தப்படுகிறது.
6. வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ், 5 ஆண்டு திட்டத்தில் இணையும் நபர்களுக்கு வரிச் சலுகைகளும் வழங்கப்படுகிறது.
ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்?
1. நீங்கள் ஒரு வருடத்திற்கு ரூ.10 லட்சத்தை முதலீடு செய்து, அதற்கு 6.9 விழுக்காடு வட்டியைப் பெற்றால், திட்டம் முடிந்தவுடன் ரூ.70806 பணத்தை வட்டி வருவாயாகப் பெறுவீர்கள். ஒரு வருடத்திற்குப் பிறகு உங்கள் வருமானம் ரூ.10,70,806 ஆக இருக்கும்.
2. இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.10 லட்சத்தை முதலீடு செய்து, அதற்கு 7.0 விழுக்காடு வட்டி கிடைத்தால், வட்டியாக ரூ.1,48,882 கிடைக்கும்.
3. உங்கள் முதலீட்டுத் தொகை மூன்று ஆண்டுகளுக்கு 7.1 விழுக்காடு வட்டியுடன் ரூ.10 லட்சமாக இருந்தால், ரூ.2,35,075 வட்டி வருவாயாகக் கிடைக்கும்.
4. இறுதியாக 7.5% வட்டியுடன் ஐந்தாண்டுகளுக்கு ரூ.10 லட்சத்தை முதலீடு செய்தால், வட்டியாக ரூ.4,49,948 கிடைக்கும். அப்போது முதலீடு செய்த தொகை 14லட்சத்து 49ஆயிரத்து 948 ரூபாய் இருக்கும். இதற்கு வரிச் சலுகைகளும் உண்டு என்பதை மறந்து விட வேண்டாம்.