முதலீட்டாளர் மாநாட்டுக்கு தொழில் துறையினர் பாராட்டு:இன்று பல லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு ஒப்பந்தம்
சென்னை: தமிழகத்தின் வளர்ச்சிக்கு உலக முதலீட்டாளர் மாநாடு உதவும் என்று முன்னணி தொழில் துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மாநாட்டின் நிறைவு நாளான இன்று பல லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட உள்ளது.
தமிழக தொழில்துறை சார்பில் சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார். வரவேற்புரையாற்றிய அமைச்சர்டி.ஆர்.பி.ராஜா, ”ஆட்டோமொபைல், உதிரிபாகங்கள், டயர் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ஏற்றுமதி 5.37 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்தது. இது நடப்பாண்டு 5.6 பில்லியனாக உயர்ந்துள்ளது. இந்திய தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்” என்றார்.
நிகழ்ச்சியில், இந்திய தொழில் கூட்டமைப்புத் தலைவர் ஆர்.தினேஷ், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனர் பவிஷ் அகர்வால், ஹூண்டாய் நிறுவன மேலாண் இயக்குநர் உன்சோ கிம், ஏ.பி.மொலார் மெர்ஸ்க் பிரதிநிதி ரெனே பில் பெடர்சன், கோத்ரேஜ் நிறுவன செயல் தலைவர் நிஷாபா கோத்ரேஜ் உள்ளிட்டோர் பேசினர்.
ஜேஎஸ்டபிள்யு எனர்ஜி நிறுவனத் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் பேசும்போது, ”கடந்த 20 ஆண்டுகளாக முதலீட்டுக்கு ஏற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. 34 சதவீதம் காற்றாலை மின்சாரம் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு தொடர்பான தனிக் கொள்கையும் உள்ளது. இவற்றால் முதலீட்டுக்கு ஏற்ற மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. தமிழகத்தில் நாங்கள் ரூ.15 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்துள்ளோம். இதை இரட்டிப்பாக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன் பேசும்போது, ”நல்ல தலைவர்கள், அதிகாரிகள், சட்டம்-ஒழுங்கு அமைதி, திறன்வாய்ந்த தொழிலாளர்கள், பொறியாளர்கள்தான் தொழில் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தமிழகத்தை முதலீட்டுக்கான சிறந்த மாநிலமாக கருதுகின்றன. 2021 மே மாதம் முதல் தற்போதுவரை 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2.70 லட்சம் கோடிக்கான முதலீடுகள் பெறப்பட்டதுடன், 4 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த மாநாடு தமிழகத்தின் திறன், வாய்ப்புகள் உள்ளிட்டவற்றைக் காட்சிப்படுத்தும் இடமாக மட்டுமின்றி, தமிழகம் சர்வதேச அளவுவளரும் என்பதை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது” என்றார். தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா நன்றி கூறினார்.
தொடர்ந்து, பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்ற கருத்தரங்கங்கள், முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.