ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அயோத்திக்கு வர துர்கா ஸ்டாலினுக்கு அழைப்பு
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22-ம்தேதி நடைபெற உள்ளது. கோயிலில் அன்று ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இந்த விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் அறிவுரைப்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து பக்தர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. திறப்பு விழா ஏற்பாடுகள், அழைப்பிதழ் வழங்கும் பணிகளை ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் வீடு வீடாக சென்று அழைப்பிதழ் வழங்கும் பணியை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு ஆர்எஸ்எஸ் சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. சென்னை கோபாலபுரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டுக்கு சென்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் அழைப்பிதழ் வழங்கினர்.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்குமாறு முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
துர்கா ஸ்டாலினை விஷ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத இணை செயலாளர் நாகராஜன் தலைமையில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பிரகாஷ், ராம ராஜேஷ், சுதர்சன் உள்ளிட்டோர் சந்தித்து அயோத்தி ராமஜென்ம பூமியில் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள சிலை பிரதிஷ்டை விழா அழைப்பிதழை கொடுத்து அழைப்பு விடுத்தனர். ராமருக்கு பூஜை செய்த அட்சதையையும் அவரிடம் வழங்கினர்.
இதுகுறித்து, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கூறியதாவது: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பிதழை வழங்குவதற்காக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு சென்றோம். துர்கா ஸ்டாலின் எங்களை அவர் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தார். திறப்புவிழாவில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறி, அழைப்பிதழ் வழங்கினோம்.
‘‘திறப்பு விழா நல்லபடியாக நடக்கட்டும். ஒரு நாள் கட்டாயம் அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகிறேன்’’ என்று துர்கா ஸ்டாலின் எங்களிடம் தெரிவித்தார். இவ்வாறு அவர்கள் கூறினர்.