ஆப்பிள் ஐபோன் வரலாற்றிலேயே அதிக பேட்டரி திறனைக் கொண்டது ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்? இணையத்தில் கசிந்த தகவல்!
ஒவ்வொரு முறை புதிய ஐபோன் சீரிஸ் அறிமுகமாவதற்கு முன்பும், எங்கு பார்த்தாலும் அது பற்றிய பேச்சாகவே இருக்கும். இந்த முறை ஐபோனில் என்ன வசதிகள் எல்லாம் கொண்டு வரப்படும் எனப் பலரும் சோசியல் மீடியாவில் விவாதிக்க தொடங்கிவிடுவார்கள். புதிய ஐபோன் 16 சீரிஸ் அறிமுகபடுத்த இன்னும் ஆறு மாதங்களுக்கு மேலுள்ள நிலையில், இப்போதே அது குறித்த பேச்சுகள் களைகட்டத் தொடங்கிவிட்டது.
குறிப்பாக ஸ்டாண்டர்டு ஐபோன் 16-ல் ‘capture button’ மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட கேமரா தொகுதிகளும் இருக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதன் உச்சப்பட்ச மாடலான ஐபோன் 16 ப்ரோ மேக்ஸில், இதுவரை எந்த ஆப்பிள் போனுக்கும் இல்லாத வகையில் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும் பேட்டரி திறன் உள்ளதாகவும் பல வதந்திகள் இணையத்தில் உலா வருகின்றன.
இந்நிலையில் தென் கொரியாவின் பிரபல சோசியல் மீடியா தளமான Naver-ல், புதிதாக அறிமுகமாகவுள்ள ஐபோன் 16 குறித்த சில முக்கியமான தகவல்களை ஒரு யூசர் பகிர்ந்துள்ளார். குறிப்பாக புதிய ஐபோன் 16 ப்ரோ மாடல்களில் ஸ்க்ரீன் அளவு 6.3 இன்ச் என்ற அளவில் அதிகரிக்கப்படும் என்றும், இதனால் ஆப்டிகல் ஜூம் திறன் அதிகரிக்கும் எனவும் கூறபடுகிறது. இதற்கு முன்பு வரை ஆப்பிள் போனின் ஸ்க்ரீன் 6.1 இன்ச் என்ற அளவில் இருக்கும்.
மேலும் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள ஐபோன் 16 ப்ரோ சீரியஸின் ஆற்றல் நுகர்வில் பலவித முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், ஒருமுறை சார்ஜ் செய்தாலே இந்தப் போனை உங்களால் அதிக நேரத்திற்கு பயன்படுத்த முடியும். குறிப்பாக ஐபோன் வரலாற்றிலேயே அதிக பேட்டரி திறனைக் கொண்டதாக ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் இருக்கக் கூடும். அதற்கு முக்கிய காரணம் அதிலுள்ள பெரிய பேட்டரி செல். இதற்கு முன்பு ஐபோன் 15 ப்ரோ மேக்ஸை 29 மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும் என கூறப்பட்டது. ஆனால் ஐபோன் 16 அதையெல்லாம் தாண்டி 30 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்த முடியுமாம்.
இது வெறும் வதந்தியா இல்லை உண்மையான தகவலா என்பதை நம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறியுள்ளதை வைத்து பார்க்கும் போது, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸில் 4,676 mAh பேட்டரி திறன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த சீரிஸில் மற்றொரு பெரிய போனாக இருக்கக் கூடிய ஐபோன் 16 ப்ளஸின் பேட்டரி திறன் குறைக்கப்படும் எனத் தெரிகிறது.
ஐபோன் 16 சீரிஸின் சிறப்பம்சங்களை பலரும் கூறி வரும் நிலையில், எங்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளதை பார்க்க முடிகிறது. ஆனால் இதில் எது உண்மை, எது பொய் என்பது ஐபோன் 16 அறிமுகமான பிறகே தெரிய வரும்.