IPL 2024 : சிஎஸ்கேவுக்கு அடி மேல் அடி.. முக்கிய பவுலர் காயம்.. தோனியை தவிக்க விட்ட வீரர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளராக கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட மதீஷா பதிரானா காயத்தில் சிக்கி இருக்கிறார். அவரால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக மோத உள்ளது. இந்தப் போட்டி மார்ச் 22 அன்று நடைபெற உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி தனது பயிற்சியை துவக்கி உள்ளது.
சர்வதேச போட்டிகளில் ஆடாத சிஎஸ்கே வீரர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டுள்ளனர். அதே சமயம், சர்வதேச போட்டிகளில் ஆடி வரும் சிஎஸ்கே வீரர்கள் வரிசையாக காயத்தில் சிக்கி வருகின்றனர். நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே சிஎஸ்கே அணியின் துவக்க வீரராக கடந்த இரண்டு சீசன்களாக சிறப்பாக செயல்பட்டு வந்தார். அவர் தற்போது இடது கை கட்டை விரலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருக்கிறார். அவரால் மே மாதம் முதல் வாரம் வரை கிரிக்கெட் ஆட முடியாது என்பதால் சிஎஸ்கே அணிக்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
அந்த தகவல் வெளியான சில தினங்களில் இலங்கை வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா தசைப் பிடிப்பில் சிக்கி இருக்கிறார். அவரால் அடுத்த சில தினங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாது என கூறப்படுகிறது. அவர் வேகப் பந்துவீச்சாளர் என்பதால் இனி உடற்தகுதி சோதனைகளை மேற்கொண்ட பின்னரே அவரால் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியும்.
2024 ஐபிஎல் தொடர் முடிந்த உடன் டி20 உலகக்கோப்பை தொடர் துவங்க இருப்பதால் காயத்தில் சிக்கி இருக்கும் வீரர்களுக்கு அந்தந்த நாட்டு கிரிக்கெட் அமைப்புகள் தடையில்லா சான்றிதழ் வழங்குவதிலும் சிக்கல் ஏற்படலாம். தங்கள் அணியின் வீரர் உலகக்கோப்பை தொடரில் காயமின்றி பங்கேற்க வேண்டும் என மற்ற நாட்டு கிரிக்கெட் அமைப்புகள் திட்டமிட்டால் சிஎஸ்கே அணி புதிய வீரர்களை நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்படும். சிஎஸ்கே அணியின் பிளேயிங் 11-ஐ தேர்வு செய்வதில் இந்த முறை தோனிக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.