ஐபிஎல் 2024 : கடைசி பந்து வரை நீடித்த பரபரப்பு… மும்பையை போராடி வென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி…

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது. இதனை குஜராத் அணியின் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பேற்ற முதல் போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இதேபோன்று மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்ட முதல் போட்டியில் அந்த அணி தோல்வியை தழுவியது.

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. குஜராத் அணிக்கு தொடக்க வீரர்கள் ரிதிமான் சாஹா 19 ரன்களும், கேப்டன் சுப்மன் கில் 31 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இருப்பினும் மும்பை அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சுக்கு முன்னால் குஜராத் அணி பேட்ஸ்மேன்களால் ரன்கள் குவிக்க முடியவில்லை.

டேவிட் மில்லர், சாய் சுதர்சன் போன்ற நல்ல ஆட்டக்காரர்களும் திணறியதால் ரன்குவிப்பு வேகம் எடுக்கவில்லை. சாய் சுதர்சன் 39 பந்துகளில் 45 ரன்களும், மில்லர் 11 பந்தில் 12 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவர்களில் கொஞ்சம் அதிரடியாக விளையாடிய ராகுல் தெவாட்டியா 15 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணிக்கு ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து இஷான் கிஷன் மோசமான தொடக்கத்தை கொடுத்தார்.

பின்னர் ரோஹித் சர்மாவுடன் இணைந்த நமன் திர் அதிடியாக 10 பந்துகளில் 1 சிக்சர் 3 பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்த ஆட்டமிழந்தார். இதன்பின்னர் ரோஹித் மற்றும் டெவால்ட்டு பிரெவிஸ் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது.

ரோஹித் 43 ரன்னும், பிரெவிஸ் 46 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். திலக் வர்மா 25 ரன்கள் சேர்த்தார். மும்பை வெற்றி பெற 36 பந்துகளில் 48 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் குஜராத் அணி பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர்.

20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடைசி பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்டபோது, அந்த பந்து நோ பால் – ஃப்ரீ ஹிட் ஆகி விடாதா என்ற எதிர்பார்ப்பில் மும்பை அணி ரசிகர்கள் இருந்தனர். இருப்பினும் கடைசி பந்தில் உமேஷ் யாதவ் 1 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்ததால் 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோல்வியடைந்தது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *