IPL 2024 : சேப்பாக்கத்தில் தொடக்க போட்டி.. ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
ஐபிஎல் தொடர் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. பல்லாயிரம் கோடிகள் புழங்கும் இந்த விளையாட்டுப் போட்டிகளால் வரும் வருமானத்துக்கு இதனை நடத்தும் இந்திய கிரிக்கெட் வாரியம் வரி செலுத்தத் தேவையில்லை என்ற சலுகையை மத்திய அரசு அளித்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17 வது சீசன் நாளை (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. சென்னை அணிக்கு தோனியும், பெங்களூரு அணிக்கு டிபிளெசிஸ் கேப்டனாக உள்ளனர். இருவருக்கும் சென்னையில் கணிசமான ரசிகர்கள் உள்ளனர்.
சேப்பாக்கம் மார்ச் 22 அதகளமாகப் போகிறது. வழக்கம் போல் ஐபிஎல் சீஸன் கோலாகலமான கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்க உள்ளது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கச்சேரி நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. கிரிக்கெட் என்ற கொண்டாட்டத்துடன், ரஹ்மானின் கச்சேரி என்ற காம்போ இணைந்தால் எப்படியிருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை. ரசிகர்களுக்கு அது முழுமையான ட்ரீட்டாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.
இந்த கலை நிகழ்ச்சிகளில் இந்தி நடிகர்கள் அக்ஷய் குமார் உள்ளிட்ட திரைபிரபலங்களும் கலந்து கொள்கிறார்கள். மார்ச் 22 முதல் ஏப்ரல் 7 ம் தேதிவரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடக்கவுள்ளன. அதற்கடுத்து ஏப்ரல் தொடங்கி மே வரை போட்டிகள் நடைபெறும்.