IPL 2024 : தோனி விரக்தியடைந்த அந்த ஒரு நொடி.. இன்னும் மனசு வலிக்குது.. வாட்சன் பகிர்ந்த சம்பவம்!

2019ஆம் ஆண்டு மும்பை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கடைசி பந்தில் தோல்வியடைந்த போது தோனி விரக்தியடைந்ததை பார்த்ததை மறக்க முடியாது என்று சிஎஸ்கே முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
17வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் இன்னும் 2 வாரங்களில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணியை எதிர்த்து ஆர்பிசி அணி களமிறங்கவுள்ளது. இந்த சீசனுடன் தோனி ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதால், சென்னை அணி ரசிகர்கள் பலரும் தோனியை கடைசி முறையாக களத்தில் பார்க்க ஆர்வமாக உள்ளனர்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்க தோனி ஏற்கனவே சென்னை வந்துவிட்டார். நாளை முதல் பயிற்சியை தொடங்கவுள்ளதால், ரசிகர்கள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கே அணிக்காக இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ள தோனி, சில நேரங்களில் கடைசி பந்தில் தவறவிட்டுள்ளார்.
கேப்டன் கூல் என்று அழைக்கப்பட்டாலும் சில நேரங்களில் தோனி உணர்வுகளை வெளிக்காட்டிவிடுவார். கடந்த சீசனில் அடைந்த வெற்றிக்கு பின் ஜடேஜாவை தூக்கி வைத்து ஆனந்த கண்ணீர் சிந்தியதை போல், 2019ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை அணிக்கு எதிராக கடைசி பந்தில் சிஎஸ்கே தோல்வியடைந்த போது, விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார் தோனி.
இதுகுறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் பேசுகையில், சிஎஸ்கே அணிக்காக 3 ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன். அந்த 3 ஆண்டுகளில் ஒரேயொரு முறை தான் தோனி விரக்தியடைந்து பார்த்திருக்கிறேன். அந்த தருணத்தை என் வாழ்வில் மறக்கவே முடியாது. 2019ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை அணிக்கு எதிராக விளையாடினோம்.
மலிங்கா வீசிய கடைசி பந்தில் ஷர்துல் தாக்கூர் ஆட்டமிழப்பார். அப்போது ஓய்வறையில் நின்றிருந்த தோனி, எதிரில் இருந்த கிட் பேக்கில் காலினை எட்டி உதைத்து விரக்தியை வெளிப்படுத்தினார். அப்போது தான் அந்த வெற்றி தோனிக்கு எவ்வளவு முக்கியம் என்பது புரிந்தது. அதனை நினைத்தால் இப்போதும் சோகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.