IPL 2024:டிக்கெட் தேவை – எனது மகள்கள் தொடக்க விழா, சிஎஸ்கே – ஆர்சிபி போட்டியை பார்க்க ஆசைப்படுறாங்க – அஸ்வின்!
ஐபிஎல் தொடர் வரும் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்க இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு சிஎஸ்கே ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். தோனியை எப்போது பார்ப்போம் என்று ஏங்குபவர்களும் ஏராளம். இந்த தொடர் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் 4 நாட்களில் சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியும், ஒரு முறை கூட டிராபையை வெல்லாத ஆர்சிபி அணியும் மோதுகின்றன. இந்த போட்டிக்கு முன்னதாக ஐபிஎல் தொடக்க விழா நடைபெறுகிறது. இதில், இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான், சோனு நிகம், அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இவர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எனினும், இது குறித்து முறையாக தகவல் ஏதும் இல்லை.
இந்த நிலையில் தான் இன்று சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடங்கியது. பேடிஎம் மற்றும் இன்சைடர், சிஎஸ்கே இணையதள பக்கத்திலும் டிக்கெட் விற்பனை தொடங்கியது. ஆனால், டிக்கெட் விற்பனை தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன. மேலும், பேடிஎம் ஆப்பில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக காலை 9.30 மணிக்கு தொடங்கிய வேண்டிய ஆன்லைன் டிக்கெட் புக்கிங் பிற்பகல் 12 மணிக்கு தொடங்கியது.
அப்போது டிக்கெட் புக் செய்ய முயன்ற போது க்யூ முறையில் முதலில் உள்ளே வருபவர்களுக்கு தான் முன்னிலை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காத விரக்தியில் சிஎஸ்கே மோசடி செய்துவிட்டதாக குற்றம்சாட்டினர். மேலும், ஊழல் நடந்து விட்டதாகவும் எக்ஸ் பக்கத்தில் விமர்சித்தனர்.
இந்த நிலையில் தான் அண்மையில் தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி சேப்பாக்கத்தில் பாராட்டு விழாவில் பங்கேற்று ரூ.1 கோடி பரிசுத் தொகை வென்ற ரவிச்சந்திரன் அஸ்வின் தனக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: ஐபிஎல் தொடரின் முதல் போட்டியான சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்ப்பதற்கு டிக்கெட் தேவை அதிகமாகவே உள்ளது. எனது மகள்கள் இருவரும் தொடக்க விழாவோடு போட்டியையும் பார்க்க ஆசைப்படுகிறார்கள். சிஎஸ்கே நிர்வாகம் உதவி செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.