IPL 2024 : வெட்டோரி வைத்த வேட்டு.. கேப்டனை மாற்றும் காவ்யா மாறன்.. 2 கோப்பை வென்ற மார்க்ரம் மாற்றம்!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக எய்டன் மார்க்ரம் தொடர்வதில் சிக்கல் எழுந்துள்ளதாகவும், வரும் சீசனில் கேப்டன்சி மாற்றம் உறுதி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் 1.3 லட்சம் இந்திய ரசிகர்களையும் அமைதியாக்குவேன் என்று சொன்னதை, களத்தில் செய்து காட்டினார் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ். இதன் காரணமாகவே ஐபிஎல் தொடரில் பேட் கம்மின்ஸை வாங்குவதற்கு பல்வேறு அணிகளும் ஆர்வம் காட்டின.
இறுதியாக ஐதராபாத் அணி தரப்பில் ரூ.20.50 கோடி கொடுத்து வாங்கப்பட்டார். இதன் மூலமாக ஐபிஎல் ஏல வரலாற்றில் ரூ.20 கோடிக்கும் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். ஏற்கனவே தரமான ஃபாஸ்ட் பவுலர்களை கொண்டு ஐதராபாத் அணி மீண்டும் பேட் கம்மின்ஸை மிகப்பெரிய தொகை கொடுத்து ஏலத்தில் வாங்கியது குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே எஸ்ஏ20 லீக் தொடரில் சன்ரைசர்ஸ் கேப்டவுன் அணி தொடர்ச்சியாக 2வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதனால் எய்டன் மார்க்ரம் கேப்டன் பதவியில் மாற்றம் இருக்காது என்றே பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு 20 நாட்கள் இருக்கும் சூழலில், ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதன்படி, இந்த ஐபிஎல் சீசனில் ஐதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவ்யா மாறனின் இந்த முடிவுக்கு பின் அந்த அணியின் புதிய பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.
ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் உடன் நெருங்கி பணியாற்றி வருகிறார். இதனால் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இடையில் நல்ல புரிதல் இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் மும்பை அணியை தொடர்ந்து ஐதராபாத் அணியிலும் சலசலப்புகள் எழுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.