IPL 2024 : ஐபிஎல் இறுதிப்போட்டி எப்போது? விரைவில் வெளியாகும் அட்டவணை.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!
ஐபிஎல் தொடரை மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 26ஆம் தேதி வரை நடத்த பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாக குழு முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
2009ஆம் ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற போது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. அதன்பின் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது ஒரு பாதி ஆட்டங்கள் ஐக்கிர அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. ஆனால் 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது, முழுக்க முழுக்க இந்தியாவிலேயே ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டது.
இதனால் 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரும் நிச்சயம் இந்தியாவிலேயே முழுமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை விரைவில் வெளியிட பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாக குழு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மகளிர் பிரீமியர் லீக் தொடரை மும்பை மட்டுமல்லாமல் மேலும் 2 மாநிலங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடர் வரும் பிப்.22 முதல் மார்ச் 17 வரை நடத்தவும், மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு விரிவுபடுத்த உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை, நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது.
ஆனால் ஐபிஎல் நிர்வாக குழு தரப்பில் அனைத்து தயாரிப்பு பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஐபிஎல் தொடரை மார்ச் 22ஆம் தேதி முதல் மே.26ஆம் தேதி வரை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் போது நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளதோடு, ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின் ஜூன் 1ஆம் தேதி டி20 உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளது.
இருப்பினும் இந்திய அணி விளையாடவுள்ள முதல் போட்டி ஜூன் 5ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனால் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாத அணிகளில் இருந்து தேர்வாகியுள்ள இந்திய வீரர்கள் 2 வாரங்களுக்கு முன்பாகவும், பிளே ஆஃப் சுற்றுக்கு தேர்வான வீரர்கள் இறுதிப்போட்டிக்கு பின்னரும் பயணிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் லீக் போட்டிகள் நடக்கவுள்ளது.
அங்குள்ள தட்பவெட்ப சூழல், தூங்கும் நேரம், பயிற்சி, குளிர் ஆகியவற்றுக்கு இந்திய அணி வீரர்கள் பழக்கப்பட வேண்டும். வழக்கமாக ஐபிஎல் தொடருக்கு பின் இந்திய அணி விளையாடியுள்ள ஒரு டி20 உலகக்கோப்பை தொடரில் கூட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில்லை. இதனால் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.