IPL 2024 : பவுலர்ஸ் எங்கே? இப்படியிருந்தா எப்படி கோப்பையை வெல்ல முடியும்.. ஆர்சிபியை பொளந்த ஜாம்பவான்
ஆர்சிபி அணியில் பவுலிங் மிகவும் மோசமாக இருப்பதாகவும், 2 நட்சத்திர வீரர்களை விடுவித்திருக்க கூடாது என்றும் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இன்னும் சில வாரங்களில் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியாகவுள்ள நிலையில், மார்ச் 22ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. இதனால் ஐபிஎல் தொடர் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இப்போதே பல்வேறு அணி நிர்வாகங்களும் பயிற்சி முகாம் குறித்து திட்டமிட தொடங்கியுள்ளனர். அதேபோல் முன்னாள் வீரர்கள் இடையிலான விவாதங்களும் தீவிரமாகியுள்ளன.
இந்த நிலையில் 16 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல முடியாமல் தவிர்த்து வரும் ஆர்சிபி அணி, இம்முறை புதிய பயிற்சியாளருடன் களமிறங்கியுள்ளது. அதேபோல் ஐபிஎல் ஏலத்தில் ஸ்டார் வீரர்களை வாங்க அதிக ஆர்வம் காட்டாமல், மைதானத்தின் சூழல் மற்றும் பிட்ச்-ற்கு ஏற்ப சில நல்ல பவுலர்களை வாங்கியுள்ளது. இருப்பினும் ஆர்சிபி அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பது அவர்களுக்கே தெரியும்.
இந்த நிலையில் ஆர்சிபி அணி குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், கடந்த சீசனை ஒப்பிட்டால், இந்த சீசனில் ஆர்சிபி அணியின் பவுலிங் பரிதாப நிலையில் உள்ளது. ஹேசல்வுட் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாது என்பதால், அவரை விடுவித்ததில் எந்த தவறுமில்லை. ஆனால் ஹர்சல் படேல், ஹசரங்கா இருவரையும் விடுவித்ததை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் பவர் பிளே, மிடில் ஓவர் மற்றும் டெத் ஓவர்கள் என்று போட்டியின் அனைத்து நேரங்களிலும் அவர்களால் பவுலிங் செய்ய முடியும்.
அதற்கான அனுபவமும் அவர்களிடம் உள்ளது. ஆனால் 2 வீரர்களையும் விட்டுவிட்டு ஃபெர்குசன், அல்ஜாரி ஜோசப்பை வாங்கியுள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பவுலிங்கை அல்ஜாரி ஜோசப் தான் வைத்துள்ளார். ஆனால் சின்னசாமி மைதானத்தில் இவர்கள் இருவரும் எப்படி செயல்படுவார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. அதனால் ஆர்சிபி அணியின் பவுலிங் நிச்சயம் மோசமாக உள்ளது. அதேபோல் ஸ்பின்னர்களையும் பெரியளவில் வாங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஆர்சிபி அணியின் முன்னாள் அனாலிஸ்ட்டான பிரசன்னா, வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமார் ஜோசப்பை வாங்க ஆர்சிபி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். அதேபோல் இங்கிலாந்து வீரர் டாம் கரன் காயமடைந்து தவித்து வருகிறார். ஒருவேளை ஷமார் ஜோசப் ஒப்பந்தம் செய்யப்படும் சூழலில், ஆர்சிபி அணியின் பவுலிங் கொஞ்சம் பலம்பெறும் என்று தெரிவித்துள்ளார்.