ஐபிஎல் 2024 – ஒவ்வொரு அணியின் கேப்டன் யார்? சவால்கள் என்ன? புதியதாக மாறியது யார்?

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் இன்னும் 7 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், இந்த தொடரில் களமிறங்க போகும் ஒவ்வொரு அணியின் கேப்டன்கள் யார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் அதில் கேப்டனின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

அணியை சிறப்பாக வழி நடத்தி யுக்திகளை சரியாக அமைத்து செயல்படும் அணியே வெற்றி பெறும். இதனால் மும்பை மற்றும் சிஎஸ்கே மட்டும்தான் இதுவரை ஐந்து முறை கோப்பையை கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த நிலையில் வரும் புதிய சீசனில் 10 அணிகளின் கேப்டன் யார் அவர்களுக்கு காத்திருக்கும் சவால்கள் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக தற்போது ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டு இருக்கிறார். குஜராத் அணியிலிருந்து வந்திருக்கும் ஹர்திக் ஏற்கனவே மும்பையில் ஆடியவர் என்பது ஒரு பிளஸ் பாயிண்ட். எனினும் ரோகித் சர்மா நீக்கப்பட்டு அந்த இடத்தில் ஹர்திக் வந்திருப்பதால் அணியில் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அணி வீரர்களை ஒற்றுமையாக ஒன்றிணைத்து விளையாடி வெற்றி பெற வேண்டும்.

நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி இம்முறை களமிறங்குகிறார். தோனிக்கு 42 வயதாகிவிட்டதால் அவர் இந்த தொடரில் பாதியில் கேப்டன் பொறுப்பை விட்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எந்த ஒரு திட்டமும் இல்லை என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துவிட்டது. தோனிக்கு காத்திருக்கும் ஒரே சவால் புதிய வீரர்களை அணியில் வழி நடத்தி பேட்ஸ்மேன் ஆகவும் விக்கெட் கீப்பர் ஆகவும் செயல்பட்டு மீண்டும் ஒருமுறை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பது மட்டும்தான்.

ஆர் சி பி அணியின் கேப்டனாக டுப்ளிசிஸ் இம்முறை மீண்டும் செயல்படுவார். 2022 ஆம் ஆண்டு முதல் ஆர்சிபி யின் கேப்டனாக டுப்ளசிஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். 23 போட்டிகளில் டுப்ளசிஸ் தலைமையில் விளையாடிய ஆர்சிபி 12 வெற்றி 11 தோல்விகளை தழுவி இருக்கிறது. அணிக்குள் வந்திருக்கும் புதிய வீரர்களை வழிநடத்தி பந்துவீச்சு பலத்தை உயர்த்தி, முதல் முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நெருக்கடி டுபிளசிஸ்க்கு உள்ளது.

டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் யார் என்பதில்தான் ஒரு குழப்பம் இருக்கிறது. கடந்த சீசனில் டேவிட் வார்னர் தான் கேப்டனாக இருந்தார். ஆனால் தற்போது ரிஷப் பண்ட் அணிக்கு திரும்பி இருக்கிறார். மேலும் அவர் விக்கெட் கீப்பிங் செய்யலாம் என்று என்சிஏ அதிகாரிகள் அறிவித்திருக்கிறார்கள். இதனால் டேவிட் வார்னர் இடமிருந்து தன்னுடைய கேப்டன் பதவியை இம்முறை பண்ட் பெற்றுக் கொள்வார். காயத்திலிருந்து திரும்பி இருக்கும் பண்ட் எடுத்த உடனே இவ்வளவு பெரிய பொறுப்பை சமாளிப்பாரா என்று சந்தேகம் உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் திரும்பி இருக்கிறார். கடந்த முறை காயம் காரணமாக பங்கேற்காத அவர், இம்முறை வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று வெறியுடன் விளையாடுகிறார். ஸ்ரேயாஸ் இதுவரை 14 போட்டியில் கேகேஆர் அணிக்கு தலைமை தாங்கி, அதில் ஆறு வெற்றி பெற்று தோல்வியை தழுவி இருக்கிறார். எனினும் ஸ்ரேயாஸ்க்கு காயம் பிரச்சனை இருப்பதால் அவர் முதல் சில போட்டிகளில் கேப்டனாக இருக்க மாட்டார் என்றும் கடந்த சீசனில் கேப்டனாக இருந்த நிதிஷ் ரானா அணியை வழிநடத்துவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை சஞ்சு சாம்சன் தான் கேப்டன். இதுவரை 45 போட்டிகளில் வழி நடத்தி இருக்கும் அவர் 24 வெற்றி, 23 தோல்விகளை பெற்றிருக்கிறார். அணியில் முக்கியமான வீரர்கள் இருந்தும் சில முக்கிய போட்டிகளில் சரிந்து அந்த அணி தோல்வியை தழுவி விடுகிறது. இந்த பிரச்சனையை சரி செய்வது தான் சஞ்சு சாம்சனுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

பஞ்சாப் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் இம்முறை களமிறங்குகிறார். இதுவரை 12 போட்டிகளில் அணியை வழிநடத்தி இருக்கும் அவர் 4 போட்டியில் மட்டும்தான் வெற்றியை பெற்று இருக்கிறார். இதனால் தன்னுடைய மோசமான கேப்டன்ஷிப் ரெக்கார்டை மாற்ற வேண்டிய பொறுப்பு தவானுக்கு இருக்கிறது.

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். 20 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்து சன்ரைசர்ஸ் அணி அவரை வாங்கி இருக்கிறது. பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவை கேப்டனாக சிறப்பாக வழி நடத்தி உலக கோப்பையை வென்று கொடுத்திருக்கும் நிலையில், அதே உத்வேகத்துடன் ஐபிஎல் தொடருக்கு திரும்பி இருக்கிறார். எனினும் சன்ரைசர்ஸ் அணி அவருக்கு புதியது என்பதால் அணியில் உள்ள குறை என்ன நிறை என்ன என்பதை அறிந்து திட்டங்களை வகுப்பது பேட் கம்மின்ஸ்க்கு சவாலாக இருக்கும்.

லக்னோ அணியின் கேப்டனாக கே எல் ராகுல் திரும்புகிறார். கடந்த சீசனின் போது ராகுல் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். இந்த நிலையில் மீண்டும் கேப்டனாக திரும்பி இருக்கும் ராகுல், கம்பீரின் துணை இல்லாமல் எப்படி அணியை வழிநடத்த போகிறார் என்பது சவாலான விஷயம் தான்.

குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஸ்டார் வீரரான இவர், ஹரிதிக் பாண்டியா முகமது சாமி ஆகியோர் இல்லாத நிலையில் கேப்டனாக எப்படி செயல்பட போகிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *